Total Pageviews

Friday, April 12, 2013

மச்ச எந்திரம்



துரௌபதையின் சுயம்வரத்தில் முக்கியமான போட்டியொன்று இருந்தது. 

மச்சயந்திரம் என்றொரு யந்திரம் . உயரத்தில் ஒரு தூணில் குறுக்குக் கம்பத்தில் நிறுவப்பட்ட யந்திரம் அது. அதில் ஒரு "மீன்" பதுமை வேகமாகச்சுழன்று கொண்டிருக்கும். 

அதன் கண்ணைப் பார்த்து அதனை அம்பால் அடிக்கவேண்டும். சுலபமாகத் தோன்றக்கூடும். ஆனால் அவ்வளவு சுலபமில்லை நண்பர்களே......!!   அந்த மீன் பதுமைக்குக் கீழே இரண்டு சக்கரங்கள் சுழன்றுகொண்டிருக்கும். அவற்றில் "துவாரங்கள்" இருக்கும். 

இந்தச் சக்கரங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமாகச் சுழன்றுகொண்டிருக்கும். இந்த இரண்டு சக்கரங்களின் துவாரங்கள் ஒன்றாகச் சேரும்போது அவற்றின் நேரே "மீனின் கண்ணும் "வரவேண்டும். 

அந்த இரு சக்கரங்களின் துவாரங்களின் வழியாக மீனின் கண்ணில் அம்பு எய்யவேண்டும். 

அத்துடன் விட்டார்களா?      இல்லை. 

அந்த மச்ச யந்திரத்துக்கு நேர் கீழே ஒரு தடாகம். அதில் நிர்மலமான நீர்; அசைவற்று இருக்கும். அந்த நீரில் மேலேயுள்ள மச்சயந்திரத்தின் பிரதிபிம்பம் தெரியும். 

மேலே மச்சயந்திரத்தைப் பார்க்காமல் கீழே தண்ணீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டு மேலே அம்பைக் குறிவைத்து எய்யவேண்டும். 

அவ்வளவுதானா? 

இல்லை. 

இன்னும் இருக்கிறது. 

அந்தத் தடாகத்தில் ஒரு பெரிய தராசு இருக்கும். அந்தத் தராசின் இரு தட்டுகளிலும் தட்டுக்கு ஒரு "காலாக" வைத்து ஊன்றி அதில் "இசகாமல் பிசகாமல்" நின்று அங்கிருந்து கீழே பார்த்துத் தண்ணீரில் தெரியும் பிம்பத்தின் மூலம் குறியைக் குறித்துக்கொண்டு, மேலே வில்லைத் தூக்கிப்பிடித்து  நாணை இழுத்துவிட்டு மீனின் கண்ணைச் "சுழலும் சக்கரங்களின் துவாரங்களின்" வழியாக அடிக்கவேண்டும்.

இப்படிக் குறிபார்த்து, மச்ச யந்திர மீனின் கண்ணில் அம்பை எய்து தான் துரௌபதையின் கரத்தை வென்றானாம் அர்ஜுனன்.

அர்ஜுனன் வென்றவுடன் ஐந்து பேருக்கும் மனைவி ஆகிவிட்டாளாம் அந்தக் "குமரி"

என்ன நண்பர்களே ! கதை புரிகிறதா?

இதில் அர்ஜுனன் யார்?.........துரெளபதை யார்?..........மச்ச எந்திரம் எது? .....மீனின் கண் எது?.....சுழன்று கொண்டிருக்கும் சக்கரம் எது?......தடாகம் எது?........தராசு எது?.....கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!!!!!!!!!


2 comments:

gayathri said...
This comment has been removed by the author.
AK said...

வணக்கம் சார்,
நீங்கள், ஜனவரிக்கு பிறகு இன்னும் பதிப்பு ஒன்றும் எழுதவில்லையே என்று நினைத்தேன்.
இப்படி சிக்கலான ஒரு விஷயத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தீர்கள் என்று இப்போது புரிகிறது.
நீங்கள் சொன்ன கதை ஏற்கனவே தெரியும் சார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்விக்கு எவ்வளவு
யோசித்தாலும் பதில் தெரியவில்லை.
விடை என்னன்னு சொல்லிருங்க சார், இல்லேன்னா எனக்கு இன்னைக்கு ராத்திரி தூக்கம் வராது !

- ஏ.கே.

Post a Comment