Total Pageviews

Friday, December 14, 2012

ஒரு தங்கை தாயாகிறாள்....




ஒரு கொத்துக் குளிர்த்தென்றல்
சட்டென்று சறுக்கி வந்து
என்உயிர் கொத்திச் சென்றதாய் ஓர்
பிரம்மாண்டப் பனிச்சரிவு எனக்குள்.

நினைவுகளும் நினைவுகளும்
நிர்ப்பந்தச் சண்டையிட,
என் கண்களுக்குள்
வானவில் ஒன்று
நிறுத்தாமல் நர்த்தனமிடும் சலங்கைச் சத்தம்.
என் தங்கை
தாயாகப் போகிறாள்.
ஒரு ஜனனச் சன்னல்
இதோ
பூமியின் பூபாளத்துக்காய் திறக்கப் போகிறது.
உற்சாக அலை ஒன்று
உள்ளுக்குள் உருள்கிறது.
அது
துள்ளும் கடலலையை எல்லாம்
உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொள்ளச் சொல்கிறது.
விரலிடுக்கில் விண்மீன் பறித்து
அதை
மின்மினிக்குப் பரிசளிக்கச் சொல்கிறது.
தோட்டத்தில்
தானியங்களை விலக்கிவிட்டு
வெள்ளைப்பூக்களும்
வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே
வளர்க்கச் சொல்கிறது.
பீலி பெய் சாகாடும் நிலை எனக்கு.
என் இதயக் குமிழுக்குள்
இத்தனை ஆனந்தத்தை
இறுக்கித் திணிக்க முடியவில்லை.
என் விரல் பிடித்து நடக்க
ஓர்
மழலை ரோஜா மலரப்போகிறது.
என் மொத்த மகிழ்ச்சிக் கொடிகளும்
ஒற்றைப்புள்ளியில்
ஓர் ஜீவ முடிச்சிடப் போகிறது.
ஒரு
பச்சைப்பிள்ளையின் முதல் சத்தத்துக்கு
ஓர் புதுத் தாயின் முதல் முத்தம்
புன்னகைப் பரிசாய் விழப் போகிறது.
பிரிய தங்கையே.,
நேற்றுவரை உன்னை பூவாய்த் தான் பார்த்தேன்.
நீ செடியான சேதியே
இன்றுதான் எனக்குள்
ஓர் சங்கீதமாய் விழுகிறது.
கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
வேர்களுக்குள் விழா நடக்குமென்று
இன்று தான்
விளங்கிக் கொண்டேன்.

3 comments:

Unknown said...

lucky sister and lucky baby

Dhivya said...

Sir, each and every year, some natural calamities occur by 20's of dec.. Could you pls explain the reason behind this?

Dhivya said...

Sir, where is "paradhesi pudavu"?

Post a Comment