Total Pageviews

Sunday, August 19, 2012

கோகுலாஷ்டமி 2012



பொன் அந்திச் சாரலில் ......... 




ஒரு மாத காலமாகவே கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.மிக எளிமையாக ,மிக உற்சாகமாக .......புன்னகைப் பூக்களின் சிதறல்களாக இந்த விழா அமைய வேண்டும் என்ற நினைப்பும் மனதில் இழையோடிக் கொண்டிருந்தது .




கிருஷ்ண ஜெயந்திக்கு பத்து தினங்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் இருந்து ஆண்டாளும்,பெருமாளும் இராஜபாளையம் யோகா யுவ கேந்திராவுக்கு வந்து விட்டார்கள்.அவர்களுக்கு எப்படியெல்லாம் அலங்காரம் செய்வது என்று கலந்து பேசி,அதற்கான ஆயத்தங்களில் கேந்திராத் தோழியர் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் ஓவியக் கற்கள் ,பொன் நிறத்தினால் ஆன சின்னக் குண்டுமணிகள் இவற்றினை ஆரங்களில் பதித்து அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.ஆண்டாள் -அழகான வெட்கத்துடன் -அருகில் இருக்க ,பெருமாள் மந்தகாசப் புன்னகையில் கண்கள் மலர
சிரித்துக் கொண்டிருந்தார்.



கன்னியாகுமரியில் இருந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டு வீதி உலா வந்தனர்.அவர்களை இதமான சாரல் -பன்னீர்த் தூவலாய் வரவேற்றது.அவர்கள் கேந்திராவினுள் வந்து,தாங்கள் எடுத்து வந்த விக்ரகங்களை வரிசைப் படுத்தி,ஆரத்தி எடுத்தனர்.மீண்டும் பஜன்ஸ் தொடர்ந்தது.



"ஹே முரளி ஸ்ரீதரா ராதே கிருஷ்ண ராதே ஷ்யாம் "

என்று செர்ந்திசைத்தனர் நம் அன்பு செல்வங்கள் ,இசை கேட்பதும் ,பூ முகங்களைப் பார்ப்பதும் ரம்மியமாக இருந்தது




குழந்தைகளுக்கான உலகம் எப்படி இருக்க வேண்டும்?என்பதை ஹர்ஷா அழகாக எடுத்துரைத்தார்.கண்ணன் பிறந்த நாளை -குழைந்தைகள் தின விழாவாக நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்ற ஆழமான கேள்வியை நம்முள் விதைத்துச் சென்றார்.யோசிக்க வேண்டிய விசயம்தான்




கண்ணணைத் துதி பாடும் ராதையாய் ஸ்ரீமதி அழகிய பாவங்களுடன் அபிநயித்தது மகிழ்வாய் இருந்தது . 



அன்பின் புன்னகையும்,மலரின் மென்மையும் ததும்ப -"கருணையினால் கசிந்து கண்ணீர் மல்கி ...."எனும் அழகான தலைப்பில் மனம் உருகக் கனிவானக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரஜினி.



மாறி வரும் பருவ காலங்களை -அதன் தன்மையை இதமாய் எடுத்துச் சொன்னவிதம் சிறப்பாக இருந்தது.மார்கழி மாதக் குளிர்ச்சியை இவரது பேச்சில் உணர்ந்தோம்.



திருமாலுக்கு படைக்கும் பிரசாதங்கள் என பதார்த்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது தேன்சுவையாய் இருந்தது.




கருணைக்கு அவர் கொடுத்த விளக்கம் -வியந்து பார்க்க வைத்தது. இரக்கம், பரிவு ,கனிவு என பக்குவமாய் சொன்னது ஈரம் உணர வைத்தது. இவரது கருத்துக்கள் அன்பால்ஆனது, ஆழமானது, ஆணித்தரமானது ,கருணையினால் ஆனது.பேச்சினில் கலந்தோம்.கரைந்தோம்.







இனி கவிதைகள் நேரம் ...........




காக்கைச் சிறகினிலே -கண்ணனின் கரிய நிறத்தைக் கண்டவன் பாரதி!

பார்க்கும் மரங்களெல்லாம் -கண்ணனின் பச்சை நிறம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி !

கேட்கும் ஒலியில் எல்லாம் -கண்ணனின் கீதம் இசைக்கக் கேட்டவன் பாரதி !



இத்தனைக்கும் மேலாக ................



தீக்குள் விரலை வைத்தால் -கண்ணணை தீண்டும் இன்பம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி!



இந்த உணர்வு அன்பின் ,ஆனந்தத்தின் உச்சம் என்று சொல்லலாம் .

கவிதையை வாசிக்கும் போதோ ......

இந்த பாடலை கேட்கும் போதோ .....

நாமும் பரவச நிலை அடைவோம் என்பது உண்மை. 


கண்ணணைத் தாயாகவும் ,தந்தையாகவும் 

தோழனாகவும் ,தோழியாகவும் 

எஜமானனாகவும் ,சேவகனாகவும் 

காதலனாகவும் ,காதலியாகவும் 

குலதேய்வமாகவும்,குழந்தையாகவும் 

இப்படி பலவாகவும் உருவகித்து,கவிதைகள் எழுதி,நம் மனசை வசபடுத்தி உள்ளான் பாரதி !

"அனைத்திலும் ஒன்றை .....ஒன்றை அனைத்திலுமாய்...."

காணும் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறான் அவன். பாரதி -கண்ணனின் பக்தன் என்று நம் எல்லோர்க்கும் தெரியும்.பல சமயத்தில் கண்ணனின் பித்தனும் ஆகிவிடுகிறான். 




பாரதியின் கண்ணனுக்காக கண்ணனின் பாரதிக்காக,

தன் தோழமைக்காக ஒரு கவிதை வாசித்தார் ஆனந்தி .




அன்பின் ஆராதிப்பாய் 

அழகின் அற்புதமாய் 

அபூர்வ பொக்கிஷமாய் ......எனத் தொடங்கி 




ஆகாச சஞ்சாரத்தில் அதர்ஷம் நீ 

அனந்த சாகரத்தில் அமிர்தம் நீ .....என தொடர்ந்து 




என்றென்றும் நீ எனக்காக-

என் ஜீவிதத்தின் உயிர்ப்பாக ! என நிறைவு செய்தது 

அருமையாக இருந்தது.




அந்த காலத்தில் ......

கிருஷ்ணனுடன் ஆடி பாடி -நாட்களை கொண்டாடிட கோபியர்கள் கோகுலத்தில் கூட்டம் கூடினார்கள் ......என்று பல பாடல்களில் கேட்டிருக்கிறோம்.காட்சிகளாய் பார்த்திருக்கிறோம்.




இன்று .....இந்த நாளில் 

பிருந்தாவனத்தில் உள்ள யோக யுவ கேந்திராவில் 

எங்கள் கோபியர்கள் ஒன்று கூடி உள்ளார்கள் 

நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிறார்கள்.

கண்களுக்கு விருந்து படைக்கிறார்கள்.

காட்சிக்கு எழில் கூட்டுகிறார்கள் 

நம் சிந்தையை வசப் படுத்துகிறார்கள் 

அவர்கள் கோல்கள்-மட்டும் ஆடவில்லை 

கூடவே நம் மனசையும் ஆட வைக்கிறார்கள்.

ஆடவும், பாடவும்,கொண்டாடவுமே இந்தப் பண்டிகைகள் -என்பதை அழகாய் சித்தரிக்கிறார்கள்.

இவை எல்லாம் காணும் போது -கண்ணனுடன் கரைகிறோம் என்பதோடு நாம் காணாமல் போய் விடுகிறோம் என்பதே உண்மையாகிறது.




இதை எழுதும் இந்தப் பொழுதிலும் பாரதியின் கவித் துளிகள் நினைவில் மின்னுகிறது.




"உருவாய் அறிவில் ஒளிர்வாய் -கண்ணா 

உயிரின் அமுதாய் பொழிவாய் -கண்ணா 

கருவாய் என்னுள் வளர்வாய் -கண்ணா 

கமலத் திருவோ டிணைவாய் -கண்ணா 

இணைவாய் எனதாவியிலே -கண்ணா

இதயத்தினிலே அமர்வாய் -கண்ணா "




சுகமாக,சுதந்திரமாக,சுந்தரமாக வந்து அமர்ந்து கொண்டான் மாயக் கண்ணன் வேணுகானம் இசைத்த வண்ணம் !







இதன் தொடர்ச்சியாக ........





எங்கும் நிறைந்திருக்கும் பிரியத்திற்குரியப் பால கோபாலனை 

உற்சாகமாக அழைத்து களி நடனம் ஆடினார்கள்.





இசை,நடனம் -ஒரு வகை தியானம் அல்லவா ?




தியானம் 'ஒன்றும் நிலை 'என்று சொல்லலாம் 

ஒன்றும் அற்ற நிலை 'என்றும் சொல்லலாம் .

மாஸ்டர் அவர்களின் அதிவேக ஆட்டத்தில் லயித்து காணாமல் ஆனோம் .


இதனைத் தொடர்ந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டிருந்தனர் .

"இசை கேட்டால் புவி அசைந்தாடும் " எனும் போது நாங்கள் எம்மாத்திரம் ?

"பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் 

பாடலுடன் தேன்கனி சேர வேண்டும் 

கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் "

-கண்ணதாசன் அனுபவத்தில் மலர்ந்த

இந்தப் பாடலுக்கு ஏற்ப சில காட்சிகள் ஆனந்தமாய் அமைந்தன.




"பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும் 

கேட்கும் இசைவிருந்தால் கைகள் தாளம் இடும் "





ஆடலுடன் பாடலைக் கேட்டு ,ரசித்து ,தன் வயமாகும் நிலை பேரானந்த நிலை அல்லவா ?




நிறைவின் நிறைவாக "கோகுலாஷ்டமி " பற்றி மாஸ்டர் சிவா அவர்கள் அற்புதமான உரை நிகழ்த்தினார்கள் .




அவற்றிலிருந்து சில முத்துக்கள் .............



கோகுலாஷ்டமின்னா "கிருஷ்ணன் பிறந்த நாள்ன்னு" நினைக்கிறோம்.இது ஒரு பக்கம் சரி தான்.இருந்தாலும் இதன் உண்மையான உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கிருஷ்ணன் ஒரு ஆள் இல்லை, மனதின் பரி பக்குவ நிலையே கிருஷ்ணன் ,கிருஷ்ணன் என்றால் கிருஷி செய்ய வந்தவன் எனப்பொருள்.கிருஷி என்றால் 


"உழுதல்"எனபொருள். இன்னும் பார்த்தோம்னா மனசை அழ உழுது ,இளக்கமாக்கி,பக்குவப்படுத்தி,பண்படுத்துறதுகுன்னு வந்த அவதாரமே கிருஷ்ணன். மனதின் உச்சக்கட்ட ஆனந்த நிலைக்கே கிருஷ்ணன் எனப்பெயர். அந்த நாள்ல கோபிகள் எல்லாரும் ஒண்னு சேர்ந்து ஆடிப் பாடி சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவாங்க. அரி வேறு அயன் வேறு என எண்ணலாகாது. "அரியும்அல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம் கருமை செம்மை வென்மையைக் கடந்து நின்ற காரணம்".எனும் சிவ வாக்கினைக் கருத்தில் கொண்டு கிருஷ்ண நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், இளக்கமான மனசுக்கு எல்லாமே சாத்தியப்படும் !......





இன்னைக்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏன் வைக்கிறாங்க தெரியுமா ?




வாழ்க்கையும் கிட்டதட்ட வழுக்கு மரம் மாதிரி தான்.

சாண் ஏறினா முழம் சறுக்கும். ஆனாலும் முயற்சி பண்ணி மேலே ஏறி,வெற்றி பெறத் தான் வேணும்னு குறிப்பாகச் சொல்றதுக்குதான் வழுக்குமரம்! வழுக்குமரத்துல வழுக்கக்கூடிய பொருள்களைத் தடவி இருப்பாங்க, சுண்ணாம்பைக் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு ஏறினால் சீக்கிரம் ஏறிவிடலாம் இது ஒரு யுக்தி. அதுபோல வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் "பாசம்" எனும் பசை இருக்கும் இதனை நீக்க "கிருஷ்ணா" எனும் கெமிக்களைப் பயன்படுத்தினால் கஷ்டப்படாமல் கரையேறி விடலாம்........இத யுக்திக்கு "பக்தியோகம்னு" பெயர். வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் ஏறி கரை சேர்ந்துவிட்டால் நமக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா????....."முக்தி"






இப்படியாகச் சில செய்திகளை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார்.




விழா நிறைவு பெற்றுத் திரும்புகையில் ....




மறுபடியும் சாரல் !- மனதை நனைத்துச் சென்றது ஆனந்தமாய் !






அன்புடன்
ஆனந்தி 






No comments:

Post a Comment