Total Pageviews

Friday, March 30, 2012

சிந்திப்போம்.............


பாவப்பட்டச் சிட்டுக்குருவிகள்!
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...,

ஏ குருவி... சிட்டுக்குருவி...


-இப்படியெல்லாம் இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பிறகு பாடவே முடியாது. காரணம்? சிட்டுக்குருவி என்று ஒன்று இருந்தால்தானே! அவையும்கூட அன்னப் பறவை, சக்கரவாக பறவை போல, ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்த பறவைகளின் பட்டியலில் இடம்பெறும் நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன செல்போன் டவர்கள். ஆம், அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் வீரியம்... சிட்டுக்குருவிகளுக்கு எமனாக இருக்கிறது என்று கண்டறிந்து சில ஆண்டுகளாகவே எச்சரித்து வருகின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

இந்நிலையில்,  20/03/12 உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, சென்னையிலிருக்கும் சிட்டுக்குருவிகளைக் கணக்கெடுக்கத் தீர்மானித்துள்ளது இயற்கை ஆர்வலர்கள் சங்கம்!

ம்... இந்த மனிதனால் எதையுமே படைக்க முடியாது. ஆனால், எதையும் அழிக்க முடியும். இதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய பரிதாப உதாரணம்... பாவப்பட்ட சிட்டுக்குருவி!சிட்டுக்குருவி மட்டுமல்லாது பட்டுப்பூச்சிகளும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.........மற்றொரு சமீபத்திய ஆராய்ச்சி, வரப்போகும் மிகப்பெரிய அபாயத்தை எண்ணி அதிர்ச்சியடைய வைக்கிறது......தேனீக்கள் தேன் சேகரித்துவிட்டுத் திரும்பும்போது தனது கூட்டிற்குத் திரும்பும் வழிப்பாதையை இந்த செல்போன் டவர் ஏற்படுத்தும் அதிர்வுகள் மறைத்து விடுகிறதாம் . இதனால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது? என நீங்கள் நினைக்கலாம். வேலைக்காரத் தேனீக்கள் கூட்டிற்குத் திரும்பாவிடில் ராணித்தேனீ இறந்துவிடும் .....இதன் பின் விளைவாகத் தேனீக்கூட்டமே அழிந்துவிடும் அபாயமேற்படும். பட்டாம்பூச்சிகளும்,தேனீக்களும் அழிந்துவிட்டால் மகரந்தச்சேர்க்கை ஏற்படாது...இதன் தொடர் விளைவாக ஒட்டுமொத்தத் தாவர இனமே அழிந்துவிடும் ....தாவரத்தை நம்பி வாழும் கால்நடைகள்?.....மனித இனம்?.....
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 1 :


தண்ணீர் : சிறிய மண் சட்டியிலோ அல்லது தட்டையான ஒரு பாத்திரத்திலோ, தினமும் தண்ணீர் வைக்கலாம். அன்றே அப்பொழுதே பறவைகள் வந்து நீரை அருந்தும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் வையுங்கள். வந்து பழகிய பின்னர், அவை தொடர்ந்து வரும்.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 2 :உணவு : வளர்ந்து வரும் கான்கிரீட் காடுகளில் சிட்டுக்குருவிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது அவசியம். கம்பு போன்ற தானியங்களை அவற்றுக்கு உணவாக வழங்கலாம். அன்றே அப்பொழுதே பறவைகள் வந்து உண்ணும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் தொடர்ந்து வையுங்கள். வந்து பழகிய பின்னர், அ
வை தொடர்ந்து வரும். குறிப்பாக நாட்டுக் கம்பு அளவில் சிறியதாக இருப்பதால் அவற்றை விரும்பி உண்ணும். ஒரு மண் தட்டிலோ, மாடியிலோ, வீட்டின் சுற்றுச் சுவரிலோ, இவற்றை வைக்கலாம்..!!
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வழிமுறை 3 :

புழு, பூச்சிகளை உண்ணும் சிட்டுக்குருவிகள், அதன் குஞ்சுகளுக்கும் அவற்றை உணவாக கொடுக்கும். நாம் வளர்க்கும் அழகுச் செடிகளில், குரோட்டன்ஸ் போன்ற செடிகளில், புழு பூச்சிகள் வராது. எனவே நம்முடைய மண் சார்ந்த பாரம்பரிய செடிகளை வீட்டைச் சுற்றி வளர்க்கலாம். அவற்றில் இருக்கும் புழு பூச்சிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும்.

Thursday, March 29, 2012

எழுத்தின் இலக்கே

அவ்வை சொன்னாள்; அகரம் எனக்கு;
அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!


வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டிய தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான் போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் யாவரும் இங்கு


விதைத்துச் சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப் போலத் தேடி அவற்றைப்
புலவோர் பலரும் பொங்கலிட்டனர்!


சித்தரும் முத்தரும் சிந்தித்த மொழியென
பித்தன்யானும் பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை அறுவடை செய்து-


நட்ட நிசியிலும் நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத் தகுந்தவை என்றே-

கம்பன் இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன் பாரதிகூறிய வாறே
நம்தொழில் எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!


நம்பிக்கை கொண்டு நாடிடுவோர்முன்
நாளும் இதையே நந்தா விளக்கென-
தெம்புடன் சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத் தெரிந்து கொள்க!


எதையும் இங்கு எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா மலைபோல் நின்று
விதியை மாற்றும் விதியை எழுதி
விதைப்பது தான்என் எழுத்தின் இலக்கு!

Monday, March 26, 2012

எச்சரிக்கை......என்ன 
செய்தால்
உங்களுக்கு கோபம் வரும் "
‘ஏன்’ 
‘சரி...சரி... என்ன சொன்னால்
கோபப் படுவீர்கள்"
‘எதற்கு கோபப் படவேண்டும்’ 
‘அப்போ உங்களுக்கு கோபமே
வராதா’ 
‘நான் சொன்னேனா’ 
‘அப்போ
கோபப் படுவீர்களா’
‘படலாம்’ 
‘கோபப் அப்டுவீங்களா?!!!
கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில்
புருவம் உயர்த்திக் கொண்டார்
சிரித்துக் கொண்டேன்
‘சாதுங்க நீங்க’ 
அவரையேப் பார்த்தேன்
‘ஆழமான பார்வை உங்களுக்கு’ 
‘அப்படியா?’
‘ஆமாங்க’
‘உண்மையாகவா?’
‘அட சத்தியமாங்க’
‘ஏன் நீங்க அப்படி
பார்க்க மாட்டீர்களா?’
‘பார்ப்பேனே.. பார்ப்பேனே.. இதோ..’ அவர்
கண்களை உருட்டிக் காட்டுகிறார்.
‘அசிங்கமா இருக்கே’ என்றேன்
‘ஏன்..???????????????!!!!!!!’
‘ஆமாங்க நல்லாவே இல்ல’ 
‘ஏன்..???????????????!!!!!!!’
‘குருடு மாதிரி இருக்கு?’
‘குருடா….!!! யாரு?’
‘நீங்க தான்
ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க’ 
சற்று நக்கலாகச்
சிரித்துக் கொண்டேன்
‘நானா???!!! நானா???!! ஆந்தையா??
என்னை பார்த்தா ஆந்தை மாதிரி தெரியுதா???
நீ மட்டுமென்ன யோக்கியமா – உனக்கும் தான்
நொள்ள கண்ணு’ என்றார் வெடுக்கென்று
‘இப்பதான் சாது’ன்னீங்க
‘ஐயோ; ஐயோ; நீயா சாது!!?
மொடாகண்டன் நீ’
‘ஆழமான பார்வைன்னு கூட
சொன்னீங்களே’
‘அப்போ சொன்னேன்
இப்போ இல்லை, நீ அப்படியில்லை’ என்றார் கோபம்
தலைக்கேறியவராக
‘ஒரே நிமிடத்தில் மாறிவிட்டேனா’ என்றேன்
‘நீ எப்பவுமே
இப்படித் தான் போல
நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டேன்’ என்றார்
‘சரி, இப்போவாவது
புரிந்துக் கொண்டீர்களா’ 
‘புரிது புரிது; நீ போ’ என்று
சலித்துக் கொண்டார்
நான் மௌனமாக அங்கிருந்து
நடக்கலானேன்
அவர் என்னை
பைத்தியம் என்று
பக்கத்தில் இருந்தவரிடம்
கோபமாக பேசிக் (பற்ற வைத்துக்) கொண்டிருக்கிறார்.
நான்
திரும்பிக் கூட
பார்க்கவில்லை அவரை
அவரின் சப்தம்
என் காதில் வெகு வேகமாக
குறைந்துக் கொள்ளுமாறு
மிக வேகமாக நடக்கிறேன்......
உலகத்தின் நடத்தை........
மனிதரின் மனசு.........
நாம் தலையாட்டும் வரை தான்;
ஒரு கண்ணைப் பற்றிப் பெருமை பேசினால்
இரு கண்ணையும் பாதுகாக்க
தயாராக இருங்கள் என்பது மட்டுமே என்
உலகத்திற்கான எச்சரிக்கை!

Saturday, March 24, 2012


ஒரு சாதாரணவாழ்க்கையைவிட
மேம்பட்ட யோகவாழ்வில்
தன்னை இணைத்துக்கொள்ள
வருகைதரும்
உங்கள் அனைவரையும்
யோகயுவகேந்திரா
வருக! வருக!
என வரவேற்கிறது.

ஓம் தத் சத்
Wednesday, March 21, 2012

அறையை அடைத்துக்கொண்டு தூங்குபவரா? ...இதைப்படிங்க!!!!
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),சிறு நீரகக் கல்,  மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிகால் வலி,போன்ற வாத நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகம்.


யோக வாழ்வியலின்படி ,  சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.  முன்பெல்லாம் இது என்ன கூத்து, காற்றுக்கும் தீட்டா என்று நான் எண்ணியதுண்டு.இதைப்பற்றிய விளக்கங்களைப் பல குருமார்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.அப்போதெல்லாம் விளங்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு  10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு நீங்கள் ஒருவர் மட்டுமே தூங்கினால் 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே யோகிகள் தீட்டு என்கிறார்கள்.

பொதுவாகக் காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தால், அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியான விகிதத்தில் வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது மட்டுமல்லாது நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையைச் செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் இனியும் தூங்காதீர்கள். 

Tuesday, March 20, 2012

அன்றும் இன்றும்........

அன்று...
எரிக்க புகைக்கும் விறகு
எரியூட்டும் எரிபொருள்....
ஏழைத் தாயின் கண்ணீர்...!
இழுத்து ஊதி.... ஊதி ஊதி...
இன்னமுது படைக்கும்
ஏழையின் சோற்றுப் பானை
சிரிக்கும்....
வெந்ததாய் வெளிவந்து...!

இன்று...
குறைவாய் நேரம்
குக்கர் வாய் இறுகும்...
அரிசி கலப்பட வேதிப்பொருள்
அலச நேரமின்றி...
அவசர சமையல்....!
மூடி மூச்சிரைக்கும்
குக்கருக்கு "மாரடைப்பு"..!
காப்பாற்ற விசிலடிக்கும்.
"உள்ளுக்குள்"  மூடி மறைக்கும்
"நாகரீகச் சமையல்". 

அன்று
உழைப்பின் மிகுதி
பிழைப்பின் தகுதி.
வாழ்வின் நித்திய
கடமையில் நிறைவேறும்
ஆசனங்கள்... அத்தனையும்..!
வியாதியின்றி ஆயாவும்...
மகளும், மருமகளும் ஆனந்த
ஆர்ப்பரித்தார்கள்.

இன்று..
தும்மல், சலம், இறுமல்,
எல்லாமும் மருத்துவ மனையில்..!
இருப்பிடம் தற்காலிகம்.
மருத்துவமனை வாடகை வீடு...!
கண்டிப்பாய் பிரசவம் "அறுவை"...!
அறுவை என்பதனாலே....
அளவோடு பிள்ளை...!
தலைவலிக்கு போய்...
தாங்கமுடியா நெஞ்சுவலி...!
வேண்டா விருந்தாய்..சில வியாதி.
இலவச இணைப்பாய்... சில வியாதி.
சொத்தை எழுதிக் கேட்கும்
"நோய்ப் பரப்பு மையங்கள்"...
 

Friday, March 16, 2012

வலைப்பூக்கள்

எண்ணமென்னும்  கடலுக்குள் தத்தளிக்கிறேன் ,
இறைவா   தத்தளிக்கிறேன்,

கரை சேர  முயற்சிக்கும் ஒவ்வொரு
முறையும் முழ்கடிக்கப்படுகிறேன் இன்னும் 

ஆழமாக முழ்கடிக்கப்படுகிறேன்.

எனக்குள் நானே திமிறிக்கொண்டும்
தினறிக்கொண்டும் முயற்சிக்கிறேன்,
இறைவா  முயற்சிக்கிறேன்.
என் நிலை பார்த்து  நகைக்கும் உன்னை
வேண்டுகிறேன்,இறைவா வேண்டுகிறேன்.
என்னை மீட்டு எந்தன் ஆன்மம் உணர
அருளும்படி வணங்குகிறேன்,

இறைவா வணங்குகிறேன்.
உங்களது  வலைப்  பூக்கள்  இருபது  வருடங்களுக்கு  முன் எனக்கிருந்த 
கவிதை ஆர்வத்தை மீண்டும்  தூண்டி  விட்டது .நான் உண்ணும் உறங்கும் 

நேரம் தவிர என் கரங்களில் வலைப் பூக்கள் மட்டுமே.......... படிக்கப்,படிக்க கண்களில் கண்ணீர் கசிய ஆனந்தமடைகிறேன் ! சிறு  வயது  முதலே  என்னக்கிருந்த ஆன்மீகத் தேடலையும் சித்தர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தையும் ஓரளவுப் பூர்த்தி செய்த  மகிழ்ச்சியில் ,


புத்தருக்கு போதிமரத்தடியில்  கிடைத்தது  போல்,ரமணருக்கு கிடைத்தது போல்,  அருணகிரிநாதருக்கு கிடைத்தது போல், எல்லோருக்கும்  ஓர்  இரவில் கிடைத்து  விடுவதில்லை ஞானம்.  தீவிரப் பயிற்சியினாலேயே அது  சாத்தியமாகிறது .டேஹ்ராபே,பால்ப்ரிண்டனுக்கு  விளக்கியது போல் நீங்கள்  உணர்ந்ததை, உங்களுக்கு  தெரிந்ததை ,அறிந்ததை, எங்களுக்கு  பகிர்ந்தளிக்கும் உங்களது  ஞானம் மேன்மையானது, உயர்வானது, போற்றதக்கது.என்னைப் போன்ற ஞான ஸூன்யங்களை உங்களது  எழுத்துக்கள் சிறிதேனும் தட்டி  எழுப்பும் என்பதில் ஐயமில்லை.


நீங்கள் இது  போன்று  மேலும் பல நூல்களை  வெளியிட  வேண்டும்  என்று  தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கிறேன் .

           
வலைத் தொடர்பு  இல்லாதவர்களுக்கு உங்களது  எழுத்துக்கள் சென்று  பயனடையும்  படி செய்த  திரு.வேல்  விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த  நன்றியைத் தெரிவித்து  கொள்கிறேன் .             மாஸ்டர் ..........ஒரே  ஒரு  வேண்டுகோள்  இதை  கேட்பதற்கு  எனக்கு சிறிதும் தகுதி இல்லைதான் ,மனிதனின் பேராசைக்கு அளவு இல்லையே ,எங்களை எப்படியும் த்யானம் வரை அழைத்துச்செல்லுங்கள் மாஸ்டர்.
அன்புடன்,
வீணா,
யோகயுவகேந்திரா

Wednesday, March 14, 2012

சிவராத்திரி ஸ்பெஷல்
 யோக யுவ கேந்திரா மையத்தில் நுழையும்போதே "இந்த வருடம் சிவராத்திரி இங்க தான் கொண்டாடப் போறோம் " என்று பேசி கொண்டிருந்தார்கள்.கேட்கும் போதே மகிழ்வாக இருந்தது. வகுப்பில் இந்தத் தகவலை மாஸ்டரே கூறிய போது, மகிழ்வு இரட்டிப்பாகியது .யோக மையத்தின் அருகிலேயே எனது வீடும் இருந்ததால்,மகிழ்வும் அதிகமாகியது.


சிவராத்திரி நாளில் பஜன்ஸ், நாடகம் ,பேச்சு ,வீணை வாசித்தல் ,தியானம் எல்லாம் கலந்து இருக்கும் கூடுதலாக இந்த வருட நிகழ்ச்சியில் கோலாட்டம் சேர்த்துக் கொள்ளலாம் என்று மாஸ்டர் சொல்லியிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..


மாஸ்டர் சொன்ன வார்த்தைகளை மிக மகிழ்வாக ஏற்று கொண்டு ......இல்லை ......அதற்கும் மேலாக வேத வாக்காக எடுத்துக்கொண்டோம் ,ரம்யா ராஜேந்திரனும், மாஸ்டரும் அனைவருக்கும் கோலாட்டம் கற்பித்துத் தர ,இந்து டீச்சரை ஏற்பாடு செய்து விட்டார்கள் .(இந்து டீச்சர் கலாக்ஷேத்ரத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது) இந்து,வாரத்திற்கு இரண்டு நாட்கள் வந்து ஸ்டெப்ஸ் கற்றுத்தந்தார்கள்.... மையமே கலகலப்பில் இருந்தது........ .


மார்கழி ,தை மாதப் பொழுதுகள் எல்லாம் கோலாட்ட உற்சவத்தில் திளைத்து போய் இருந்தன.எங்களது ஸ்ரீரங்கபாளையமே அழகிய பிருந்தாவனமாய் மாறி இருந்தது.பனிப் பொழிவோடு புது வித மெருகும் கூடிப் போனது.வழி எங்கும் இருந்த புங்கை மரங்களும் கோலாட்ட சகோதரிகளின் வருகைக்காகக் காத்து இருந்தன .இலைகளின் தலையசைப்பில் ஒரு வரவேற்பின் இதம் தென்பட்டது.


மார்கழியும் விரைவாக விடைபெற்றுச் சென்றுவிட்டது .இன்னும் ஒரு மாதம் தான்! விளையாட்டுத்தனம் கொஞ்சம் குறைந்து ,மிக அக்கறையோடு கற்றுக் கொண்டார்கள் .யார் யார் எந்தெந்தப் பாடல்களுக்கு என்று தேர்வு செய்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ,நேர்த்தி செய்யப்பட்டது .மனம் நிறைந்த ஈடுபாட்டுடன் சரியான ஒருங்கிணைவுடன் அழகான முக பாவனையுடன் ,புன் சிதறல்களோடு மிக நளினமாக அவர்கள் ஆடுவதை அருகில் இருந்து பார்க்க பார்க்க ஆஹா ! ஆனந்தம் !

விழாவிற்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது .வீட்டை மறந்து பணிகளைத் துறந்து ,உணவை மறந்து ,உறக்கம் குறைந்து ,இத்தனைக்கும் மேலாகத் தங்களையே மறந்து கோலாட்டத்தில் மூழ்கி முத்துக்கள் எடுத்தனர் சகோதரிகள். வீட்டில் இருக்கும் போது கூடப் பாடல்களை ஹம்மிங் செய்து கொண்டு ,கோலாட்ட ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஒவ்வொருவர் முகத்திலும் சூரியப்பிரகாசம் தான்! அது அவரவர் கண்களில் அலையென அடித்துக்கொண்டிருந்தது.


சிவராத்திரிக்குச் சில தினங்களுக்கு முன்பாக,   கோலாட்ட ஒத்திகையைப் பார்த்த மாஸ்டர், நன்றாக இருக்கிறதென்று சொன்ன பின்பு அவர்களுக்குள் இன்னும் அதிகமான உற்சாகம் குமிழ் விட்டது.


யோக மையத்தில் ரம்யா குழுவினர் கோலாட்டமும்,உமா குழுவினர் பஜன்சும், வலையில் மாஸ்டர் எழுதியிருந்த,ஜென்...பாரதி கதைகளை வாசித்து கல்யாணி குழுவினர் அதனை நாடகமாக்கியதும்,வசனகர்த்தா ஆகியதும், அனைவரும் மாறி மாறி பயிற்சிகள் எடுத்து கொண்டதும்,சிவராத்திரி நன்னாளை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது.


மாஸ்டர் ,அடிக்கடி சொல்வார்கள்........

பண்டிகை என்பது பகல் நேரங்களில் கொண்டாடப்படுவது!

விழாக்கள் என்பது இரவு நேரங்களில் கொண்டாடப்படுவது!


அறியாமை இருளை நீக்கி அறிவு ஒளியை பரவச் செய்யும்,அற்புத விழாக்கள் சிவராத்திரி, நவராத்திரி என்றும் குறிப்பிடுவார்கள்.மேலும் நம்முள் இருக்கும் சக்தியை வெளிபடுத்துவதும் இந்த விழாகாலங்களில் தான் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.

பிப்ரவரி 16ல் விழாவை ஆனந்தா கார்டென்சில் நடத்துவது என முடிவு செய்தார்கள்.ஏற்பாடுகள் வேகமாக நடந்தேறின.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொறுப்புகள் எடுத்து கொண்டு திறம் படச் செய்து முடித்தனர்.விழா களை கட்டிவிட்டது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.பிப்ரவரி 20 இரவு 7மணிக்கு ஆனந்தா கார்டென்ஸ் சென்ற போது இதற்கு முன் பார்த்த இடம் அடியோடு மாறிப்போயிருந்தது.மேடைக்குப்பின்னே பசுமையான தென்னங்கீற்றுகள் அணி வகுத்து நின்று அழகு சேர்த்தது.இதற்கு நடுவில் சிவலிங்கம் வைக்கப்பட்டு இருந்தது.சுற்றிலும் மலர்கள் பல வித வண்ணங்களில்! சுர மாலைகளும்,வில்வ இலைகளும்,தோரணங்களும் காண்போர் கண்களைக் கவர்ந்தன.


தென்காசியில் இருந்தும்,சிவகாசியில் இருந்தும் வந்த நம் கேந்திரா அன்பர்களை வரவேற்று உபசரித்து உள் அழைத்து வந்து,அமரச்செய்த பின் மிகச்சரியாக 8.௦௦ மணிக்கு விழா தொடங்கியது.திருமதி.மஞ்சுளா அவர்கள் குத்துவிளக்கு ஏற்ற,சிவகாசி ஸ்ரீதர் அன்புடன் வரவேற்க நிகழ்வுகள் தொடர்ந்தன.திருமதி.மஞ்சுளா அவர்களின் இனிமையான வீணை மீட்டலோடு விழா ஆரம்பம் ஆகியது.


சிலர் பேசுவதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கும் இன்னும் சிலரது பேச்சு, மழையில் நனைவது போன்ற சில்லிப்பு தரும்.மழையே பேசினால்! எப்படி இருக்கும்? வர்ஷாவின் பேச்சு -அவையினரைக் கட்டிபோட்டது.


அடுத்து ஹர்ஷாவின் உரை- சிவராத்திரியின் பெருமையை பேசியது.


"விடிய விடிய கண் விழிக்கிறது மட்டும் சிவராத்திரின்னு அர்த்தம் கிடையாது.மனசில விழிப்பு வரணும்"


"விழான்னு சொன்னா-நம்ம உறவுகளை பாக்கறது,அவங்களோடு சேர்ந்து இருப்பது,சேர்ந்து கொண்டாடுறது"


"சிவராத்திரி காலத்தில் அவரை விதை விதைச்சா நவராத்திரி காலத்தில் அவைகள் பல்கிப் பெருகும்"


இப்படி......அழகழகான எண்ணங்களை அருமையா விதைச்சார் ஹர்ஷா!


'ஆடலும் பாடலுமாக விழாக்கள் கொண்டாடப்படுகிறது. உண்மை தான்!ஆனால் மௌனமாக ஒரு விழா கொண்டாப்படுகிறது என்றால் அது சிவராத்திரி தான். எண்ணிறந்த காய்களை,கனிகளை மரம் சுமக்கிறது .அனைவருக்கும் உண்ணத் தருகிறது ஆனால்,அது தன் பசிக்கு எதவும் உண்ணமுடிவதில்லை.பள்ளம் நோக்கி வரும் ஆறு......தன் வழி எங்கும் பாய்ந்து சென்று குளம் ,ஏறி அத்தனையும் நிரப்பிக் கடலில் கலக்கிறது.ஆனால் அது தன் தாகத்திற்கு எதுவும் அருந்த முடிவதில்லை.காலைக்கதிரவன் தன் ஆயிரம் கதிர்களால் உலகம் எங்கும் ஒளி பாய்ச்சுகிறது.தனக்கு ஒளி வேண்டும் என்று எதுவும் கேட்பதில்லை.இயற்கை தனக்காக வாழ்வதில்லை.அது மற்றவர்களுக்காகத் தான் வாழ்கிறது.அதே மாதிரி மனிதர்களும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்று எடுத்து சொல்வதற்காகவே,சகமனிதர்களின் துன்பங்களை, துயரங்களை,  களைவதற்காகவே இப்படிப்பட்ட விழாக்கள் அமைய வேண்டும்.....
மீனா கவிதை வாசிக்க,ராதிகா ஜோதிர்லிங்க உரை ஆற்றினார்.


"தில்லையுள் கூத்தனை,தென்பாண்டி நாட்டானை


ஆற்று இன்ப வெள்ளமாய் தோற்ற சுடரொளியாய்


போற்றி புகழ்ந்து,மெய் ஞானம் வேண்டியதை கேட்ட பொழுது,


பாட்டின் பொருளுணர்ந்து சிந்தை இனித்தது"


தென்காசி கேந்திரா சகோதரி பங்கஜம் ,இராஜபாளையம் சகோதரிகள் பத்மா ஜெயந்தி குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடல்கள் பல பாடி எங்களை எண்ணங்களற்ற நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

ஸ்ரீமதி.மஞ்சுளாவும்,மகேஷ்வரியும்,வீணை மீட்டி எங்களை அந்த இசையில் நெகிழ வைத்தனர்.

சிவகாசி நன்பர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் சிந்திக்க வைத்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.ஜென் கதைகள்,பாரதி கவிதைகள் இவற்றிலிருந்து முக்கியமான மைய கருத்தை எடுத்துக்கொண்டு.மிக நுட்பமான வார்த்தைகளால் நாடகம் தயாரித்து,பாத்திர பொறுப்பு ஏற்று மிகச்சிறப்பாக நடித்தார்கள்.நாடக இறுதியில் கூறிய விளக்கங்கள் எல்லாம்,போகிற போக்கில் அள்ளித் தெளித்து விட்டு சென்றார் போல் இருந்தது.யதார்த்த உண்மைகளை மிக எளிதாக புரிய வைத்தனர்.இயல்பாக இருப்பதே ஞானம்.இயற்கையும் இறைமையும் ஒன்று தான் என்ற உண்மையும் உணரப் பட்டது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு உண்மை-நிச்சயிக்கப்பட்ட உண்மை-மரணம் தான்! அது எப்போது,எப்படி நம்மைத் தொடும் என்று யாராலும் சொல்லிவிட முடியாது.

யோகா,த்யானம் போன்ற அற்புதமான விஷயங்களை காலத்தே அறிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் ஒரு நாடகம் அமைந்திருந்தது.ஒரு சில கால கட்டத்திற்குப் பின் அவற்றைத் தேரிந்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த நேரத்தில்,அவனை மரணம் தழுவி விட்டது.மரணம் நேர்ந்த பின் மாலை,மரியாதை செய்த காட்சி......இயல்பாக இருந்தது.


இருக்கும் போதே இல்லாத நிலைக்கு ஆளாகி, மாலை ஏற்று நடித்த ரேவதிக்கு அனைவரும் தம் பாராட்டுதல்களை,கரவொலிகளின் மூலம் தெரிவித்தனர்.


இந்த சிவராத்திரி பொழுதில் மரணம் பற்றிய சம்பவக் கதைகளே அதிக இடம் பிடித்திருந்தது.


"நான் இருக்கும் வரை மரணம் என்னை தீண்டுவதில்லை,
மரணம் என்னை தொட்ட பிறகு நான் இருக்க போவதில்லை" என்று மாஸ்டர் கூறியது நினைவிற்கு வந்தது.


"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த வகையிலும் எனக்கு மரணம் இல்லை"-கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் பள்ளிச்சென்று மின்னியது.

"நான் இருக்கும் போதே என்னை கேட்டுவிடுங்கள்
நான் இறந்த பின்-என்னால் கேட்க முடியாது"- மாஸ்டரின் முகநூல் வரிகள்

 சந்தோஷமாக நினைத்து பார்த்து கொண்டேன்.


இன்றைய நிகழ்ச்சியில்,சுப்பிரமணிய பாரதியின் 'அருந்தவப் பன்றி'-என்னும் நூலில் இருந்து ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. அருந்தவத்தினால் ஞானியான ராஜா ஏதோ ஒரு தவற்றினால்,முனிவரின் சாபத்திற்கு ஆளாகி பன்றியானார்.விமோசனம் வேண்டி ராஜாவின் மகன் முனிவரை யாசித்தான்.அதற்கு அவர்,உன்னுடைய மகன் உன்னை அழைக்க வரும் போது நீ மீண்டும் ராஜாவாக மாறுவாய் என்று கூறிச்சென்று விடுகிறார்.


இந்த பன்றி வாழ்க்கையில் ராஜாவுடைய நாட்கள் கடந்து கொண்டிருந்தன.ஒரு நாள் ராஜாவின் மகன் அப்பாவை அழைக்க வருகிறான்.அதற்கு அவர் 'இந்த வாழ்க்கை எனக்குப் பழகிப்போய்விட்டது.நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.நீ போய்வா' என்கிறார்.


சில காலம் சென்ற பின், மறுபடியும் அழைக்க வரும்போது 'எனக்குத் திருமனமாகிவிட்டது.சந்தோஷமாக இருக்கிறேன்' என உடன் செல்வதற்கு மறுத்து விடுகிறார்.


இரண்டு,மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மகன் அழைக்க வரும்போது 'நான் இப்போது மனைவி,குழந்தைக் குட்டிகளோடு சந்தோஷமாக இருக்கிறேன்.இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துப்போய்விட்டது.நீ போய்வா என்று அனுப்பிவிடுகிறார்.'


எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஜமீன்தாரின் கீழ் வேலை பார்க்கும்,அவல நிலை தனக்கு வாயத்ததை பன்றி நிலைக்கு ஒப்பிட்டு காட்டுகிறார் பாரதி.பாரதியை போல் உண்மை உரைக்கும் துணிவு யாருக்கும் வராது.அவர் தன்னையே 'அருந்தவ பன்றி'-என்று கூறிக்கொள்வது வலியும் வேதனையும் தருகிறது.


மேற் கூறியவற்றை கவிதையாக்கி இருந்தார் பாரதி.இவற்றை காட்சியாக்கி ராதாவும்,சித்ராவும் நடித்துக் காட்டியது மிக தத்ரூபமாக இருந்தது. ரமணர் பற்றிய நாடகம் மிக அருமையாக அரங்கேற்றப்பட்டது.

'உயிர்களிடத்து அன்பு வேண்டும் -தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேண்டும் '

இப்படியான கருத்துக்கள் பலரின் நட்பின் மூலம் மெய்பிக்கப்பட்டது. ரமணராக பாத்திரமேற்று மெருகு ஊட்டியவர் சிவகாசி அன்பர் நாகராஜ் அவர்கள்.இவரைச் சுற்றிலும் உள்ள ஜீவன்களாக பலர் இருந்து தங்கள் நடிப்பாற்றலை அற்புதமாக வெளிப்படுத்தினர்.

இன்றைய நிகழ்ச்சியில்,நாங்கள் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த கோல்லாட்டக் குழுவினர் நான்முகக்கடவுள் விநாயகரைத்  துதி பாடி ஆடினர்.  ,இதற்கு முன் நடனம் ஆடியதில்லை,மேடை ஏறியதில்லை.இன்று அநாயசமாக ஆடுவதற்கு வழி வகை செய்தது யோக யுவ கேந்திரா தான்! கூடவே எங்கள் இந்து டீச்சரும், கோலாட்டம் இடம் பெற வேண்டும் என்ற மாஸ்டர் சிவா அவர்களின் வார்த்தைகளும் தான் !

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ - கண்ணா !

பாட்டின் போருளுக்கு ஏற்ப 'கோல்கள் ஆடுவோம் '-என்ற பாடலுக்கு குழுவினர் இரண்டாவது முறையாக ஆடி எங்களை மகிழ்வின் எல்லைக்கு அழைத்து சென்றனர்.

மீண்டும் ஒரு கோலாட்டம் கண்களுக்கு விருந்தாய் !

தமிழ்நாட்டில் எப்படி கோலாட்டமோ,அப்படி குஜராத்தில் தாண்டியா ஆட்டம் ! நாம் குஜராத் தாண்டியாவை -இங்கு அமர்ந்த படியே ரசித்துப் பார்த்தோம்.இவர்களின் நடனம் உற்சாகம் மிக்கதாய் இருந்தது.

இன்னுமொரு நிகழ்வாக மீரா பஜன்ஸில் உள்ள ஒரு பாடலுக்கான -ஆடல் ! இதை 1968ல் லதாமங்கேஷ்கர் தேன் குரலில் பாடி இருக்கிறார். இசைக்கு ,நடனத்திற்கு வயது ஏது? எல்லை தான் ஏது? இந்த பாடல் 'ராசலீலா' பற்றியது.கிருஷ்ணன் -ராதா ,கோபிகையர் குழு பரவசமாய் ஆடி பாடுவது !

கிருஷ்ணன் பரிபூர்ண அன்பின் ஸ்வருபமாக ,பரமாத்மாவாக உணரப்படுகிறான்.ராதா ஆழமான அன்பின் தேடலாக ஜீவாத்மாவாக உணரப்படுகிறாள்.

ஆழமான தேடல் -அன்பில் கரைய ,ஜீவாத்மா -பரமாத்மாவில் இணைய பாடி ஆடி ஒன்றிணைவதை இந்தபாடல் மூலம் காட்சிப் படுத்தினார்கள்.அதில் கரைந்து ஒன்றுமற்றுப் போய்விட்டோம் என்பதே உண்மை.

தீபங்கள் கார்த்திகை மாசம் மட்டும் தானா பேசும்?

இந்த மாசி மாசத்திலும் ,நம்முடன் பேசவந்திருக்கின்றன கொஞ்சும் தீபங்கள் !

இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி செய்து புல்லாங்குழல் இசைக்கு ஏற்ற வண்ணம் அவர்கள் ஆடியது கொள்ளை அழகாய் வசீகரித்தது.

' எல்லாப் புகழும் சத்குரு ஒருவனுக்கே'

இன்றைய நடன நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் எங்கள் நடன இயக்குனர் இந்துவுக்கே !


சிவவாக்கியார் பாடலை மாஸ்டர் சிவா அவர்கள் பாட ,உடன் வேல்விஜயன், டாக்டர் ஹரி,மற்றும் அனைவரும் இணைந்து பாடினோம்.வாத்தியக் கருவிகளின் இசையும் மகிழ்வும் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது .

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ ,

எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்தபண் எழுத்தும் நீ,

கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவைநீ,

நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்!

நாம் யார் ? நாம் எங்கிரூக்கிறோம் என்பதே இல்லாத பேரானந்த நிலை உணர்ந்தோம்.எம்மை விட்டு நாங்கள் வெளிவர,நிறைய நேரம் ஆகியது .

நீர் ,நிலம் ,ஆகாயம் ,காற்று ,நெருப்பு -இதனினும் சிறந்த உறவு வேறு என்ன இருந்து விடப் போகிறது ?

பஞ்ச பூதங்களுக்கு மனமார அன்பும் நன்றியும் சொன்னோம்.


இந்தியா உலகிற்கு அளிக்கும்

ஒரு இனிய உதயம் - அரவிந்தம் !

இன்று ,இந்த இனிமையான சிவராத்திரியில் ஒரு இனிய உதயத்தை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதை விடப்  பெரும் பேறு எனக்கு என்ன வேண்டும் ?

*

திங்களும் ,செவ்வாயும்

இணையப்போகிற தருணம் இது

இருளும் ,வெளிச்சமும்

ஓன்றிணைந்து - மெல்ல

நகருகின்ற அற்புதக்  கணம் இது !

*

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை

நேரே யின்றெனக்குத் தருவாய் - என்று

யோக சித்தியில் -மகாசக்தியிடம் கேட்கிறான் பாரதி.

அவன் தனக்கு மட்டும் வரம் வேண்டவில்லை.

நாட்டு மக்கள் கீர்த்திஎங்கும் ஓங்க

வையத் தலைமை எனக்கு அருள்வாய் என்கிறான் !

*

வரங்கள் பெற -நாம் என்ன செய்ய வேண்டும் ?

நல்ல தவம் செய்ய வேண்டும் .

எத்தனை காலம் ?நமக்குத்  தெரியாது .

சக்தி இருந்தால் அனைத்தும் சாத்தியப்படும்.

சக்தி எல்லையற்றது

நமக்குச்  சக்தி கொடுப்பது காற்று .

வலிமையை ,வளமையை சேர்ப்பதும் காற்று .இதைப் பாடமாக்கி -நம்மை


புடம் போட்டுக் கொண்டிருப்பவர்

நம் மாஸ்டர் சிவா அவர்கள்

*

இன்று நம் மாஸ்டர் மூலம்

ஒருவர் அறிமுகம் ஆக இருக்கிறார்.

*

சக்தி வெள்ளம் என்றால்

ஞாயிறு ஒரு குமிழியாம்.

சக்தி பொய்கை என்றால்

ஞாயிறு ஒரு மலராம் -பாரதி

*

ஆம் ! ஞாயிறு ஒரு மலராய்

அரவிந்தமாய் மலர்ந்திருக்கிறது .

*

தென்பொதிகைச்  சாரலில் இருந்து

புறப்பட்டு வந்திருக்கிறது -தமிழ் அமுதாய் !

*

காற்றாய் ,நெருப்பாய்,விரிகடல் வியப்பாய்

நிர்மல வானாய் நம்முடனே அமர்ந்திருக்கிறது .

*

20 வருஷ பாடங்களை

இருபதே நாட்களில் கற்றுத்தேர்வதும் -

அதை நம்மிடம் பகிர்ந்து கொள்வது என்பதும்

அசாதாரணமானது, அதிசயமானதும் கூட !

*

பேரன்பாய்,பேரானந்தமாய் .

பேரின்பமாய்,பெருமிதத்துடன்

பெருமை பொங்க மௌன அழகாய்

அமர்ந்திருக்கும் அமுதாவிற்கும்

சிவா மாஸ்டர் அவர்களுக்கும் ,

அரவிந்தன் அவர்களுக்கும்

யோகா யுவ கேந்திர மாணவர்கள் சார்பில்

எம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை

பூ மழையாய் சமர்ப்பிக்கிறோம் .

*

வாருங்கள் அரவிந்த்

இது உங்களுக்கான நேரம்

உங்களுக்கானக்  களம்

தாங்கள் கற்றுக் கொண்டதை

எங்களுக்குத் தாருங்கள் 


மெல்லிய இசையின் பின்னணியில் -அரவிந்த் ஆசனங்கள் செய்ய ,அரங்கமே வியந்து நின்றது . சொல்வதற்கு ஏதும் இயலாத பூரிப்பில் கண்கள் பனித்திருந்தது.அமைதியும்,ஆராவாரமும் பின்னிப் பிணைந்து வண்ணக் கோலமாகியது. ஒரு ஆசனம் செய்யும் பொழுது அரவிந்த் சிறிதே தடுமாற ,உடனே சிவா மாஸ்டர் அவன் அருகில் சென்று அமர்ந்து கொள்ள ,அந்த ஆசனத்தை சரி செய்தான் .அந்த சூழலை என்னவென்று சொல்வது ?அதன் பின்,மாஸ்டர் தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். ஓவ்வொரு ஆசனம் செய்த முடித்த பின்பு ,அவன் அப்பாவைப் பார்க்க ,அவர் கண்களில் தெரிந்த அன்பும், அரவணைப்பும் .........சொல்ல வார்த்தைகள் இல்லை .பார்வைகளின் பாஷையைப் பூரணமாகப் பார்த்தேன் .ஆம் ! மௌனம் பேசியது.பேசிக் கொண்டிருந்தது .


'என்ன தவம் செய்தனை ! யசோதா' என்ற பாடல் வரிகள் மனசில் தவழ்ந்ததை -எடுத்துச் சொல்ல முடிந்தது.

மீன் குஞ்சுக்கு யார் நீச்சல் கற்றுத் தருவார்கள் ?

யாரும் நீந்தக் கற்று தர வேண்டியதில்லை

அது தானாகவே கத்துக்கும்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,மீண்டும் பாரதியின் கவிதை வரிகள் நட்சத்திரங்களாய் வந்து விழுந்தன .

'உச்சிதனை முகர்ந்தால் -கர்வம்

ஓங்கி வளருதடி

மெச்சியுன்னை யூரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி !'

கர்வத்தையும் சிலிர்ப்பையும் ஒரு சேரக் கண்டு இன்புற்றோம்.'எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்கு அளிக்கும் -ஆம்

இந்தியா உலகிற்கு அளிக்கும் -ஆம் ஆம்

இந்தியா உலகிற்கு அளிக்கும்-வாழ்க !'


சிவா மாஸ்டர் அடிக்கடி கூறும் இந்த கவிதை வரிகளையே அரவிந்திற்கும் கூறுகிறேன்.

வாழ்த்துக்கள் அரவிந்த் !ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை பஞ்ச கோஷ த்யானம் மாஸ்டர் அவர்களால் கொடுக்கப்பட்டது.அதில் ஒன்றி இருந்த அனுபவம் அகமும் ,புறமும் மறக்கச் செய்தது.

நிறைவின் நிறைவாக, சிவராத்திரி பற்றிய மாஸ்டர் .சிவா அவர்களின் அன்பு உரை மனசை நிறைத்தது.ரம்யமாய் ,மனோகரமாய் ,அதி மதுரமாய் ,மோன அழகாய் ராத்திரிப் பொழுது எங்களுள் கரைந்தது. காலைப் பனிப் பொழுது, புன்னகையாய்த் தழுவி,வணக்கம் கூறி ,எங்களைக் குளிரச் செய்தது .


என்ன தவம் செய்தோம் நாங்கள் !இப்படி
அழகழகான வரங்கள் பெறுவதற்கு !

நன்றி -இயற்கைக்கு ,இறைமைக்கு ,இன்னிசைக்கு.எங்கோ இருந்துகொண்டு எங்களை வழிநடத்தும் சத்குருனாதனுக்கு......


அன்புடன்,
ஆனந்தி.
இராஜபாளையம்