Total Pageviews

Friday, February 10, 2012

திருவண்ணாமலைச் சித்தன்....




இன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை "குருத்தன்மை" என்றால் என்ன?, தத்தாத்ரேய மஹரிஷி எப்படிக் குருத் தன்மையை தன்னுள் உணர்ந்து கொண்டார் என்பது போன்ற சில ஆழ்ந்த உண்மைகளை சாமி கூறிக்கொண்டிருந்தார்கள்.


இதோ, கிரிவல நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கானப் பக்தர்கள் இஸ்திரி செய்து கொண்டிருக்கிறார்கள். குபேர லிங்கத்தைத் தரிசிக்க ஒரு பெரிய நீ........ண்ட வரிசை நின்று கொண்டிருக்கிறது. சாமியும், நானும் பஞ்ச முக தரிசனம் நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். அதிகாலை 2 மணிக்குக் கூட இடுக்குப் பிள்ளையாரை யாரும் ஓய்வெடுக்க விடுவதாகத் தெரியவில்லை. இங்கேயும் ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருக்கிறது........


அதிகாலை 5 மணியளவில் பஞ்சமுக தரிசனத்தில் சாமி பிரிந்து உள்கிரிவலப் பாதையில் சென்று விடுகிறார்கள்..... சாமியிடம் விடைபெற்ற நான் அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்கிறேன். தூக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிறது. தூங்கிப்போனேன்




எழுந்தபோது ஏழு மணி இருக்கும். சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கிறான். 


லேசான பசி வயிற்றை கிள்ளுகிறது. சாமி கூறிய யோக பாடங்களை அசை போட்டபடி ஹோட்டல் ராமகிருஷ்ணாவை நோக்கி நடக்கத் துவங்குகிறேன். "அவனவனுக்கு அவனவன் மனமே குரு.....தனக்குள் இருக்கும் குருத்தன்மையை உணர்ந்து கொண்டவர்களே வெளியில் உள்ள "காரிய குருவையும்" உணர்ந்து கொள்ள முடியும்.  யோகசாதனைகள் தனக்குள் உள்ள குருத் தன்மையை உணர்ந்து கொள்ளவேப் பயன்பட வேண்டும். அவ்வாறில்லாமல் தலைவலிக்கும், வயிற்றுவலிக்கும் மட்டுமே யோகப்பயிற்சி என நினைப்பது அறிவுடைமையாகாது.  தன்னுள்ளேயுள்ள குருத்தன்மையை உணர்ந்த காரணத்தாலேயேத் தத்தாத்ரேய மஹரிஷியால் ,பஞ்சபூதங்களையும், பாம்பையும், சிலந்தியையும் கூடக் குருவாக ஏற்றுக்கொள்ள முடிந்தது."


ஹோட்டல் வாசலில் “அண்ணே பலகாரம் வாங்கிக்கிறீங்களா?” என்ற ஒரு குரல் என் சிந்தனையைச் சிதறடிக்கிறது.


அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவன் என்னை நோக்கி வருவதைக் காண்கிறேன். கசங்கியச் சட்டை, சற்றே கலைந்த முடி, முட்டி அளவிளான அரை காற்சட்டை, ஒட்டி உலர்ந்து போன உடல், இவையாவும் அவன் வறுமையை எடுத்துரைத்தது.


இப்பொழுது அவன் என் எதிரில் என்னை நோக்கி புன்சிரிப்புடன் கேட்கிறான். அவன் கையில் இருந்த பிஸ்டிக் கூடையை என் முன் காட்டுகிறான். பலகார வகைகள் சிறு சிறு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருகின்றன.


“வேண்டாமப்பா” இது எனது பதில்.


அவன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான். சாப்பிட்டு முடித்து வெளியில் வருகிறேன் மறுபடியும் அச்சிறுவன் என் கண்ணில்படுகிறான். ஒரு காரில் ஆணும் பெண்ணுமாக இருவர் அமர்ந்து இருகிறார்கள். கணவன் மனைவி என நினைக்கிறேன். பலகாரக் கூடையை அவர்களிடமும் நீட்டுகிறான். அவர்களும் வேண்டாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைக்கவும், சிறுவன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறுபடியும் என்னிடமே வருகிறான்.



“சாப்டாச்சா அண்ணே, பலகாரம் வாங்கிக்கிறீங்களா”, மறுபடியும் என்னை நோக்கிக் கேட்கிறான்.


“வேண்டாம்பா, வயிறு நிறைய சாப்பிட்டாச்சி”, எனக் கூறியவாறு நடக்க ஆரம்பிக்கிறேன்.



சிறுவனோ பக்கத்திலிருந்தப் பெட்ரோல் பங்கினுள் நுழைந்து, கையிலிருந்த பலகாரக்கூடையைக் கீழே வைத்துவிட்டு, அந்த பக்கம் வந்து போவோரிடம் பலகாரம் வேண்டுமா? என அதே பல்லவியை படித்துக் கொண்டிருக்கிறான்.


அவன் பேச்சில்தான் எத்தனை மரியாதை. கனிவான பார்வை. எவ்வளவு நேரமாகியும், கொஞ்சமும் சலிப்புத் தட்டாமல் அதே தொனியில் அடுத்தவரிடம் கேட்கிறான். “அக்கா பலகாரம் வேணுமா”, “அங்கில் பலகாரம் வேணுமா”. மிஞ்சி போனால் அச்சிறுவனுக்கு 10 வயது தான் இருக்கும். என்ன ஒரு துடிப்பு. தளர்ச்சியில்லா விடா முயற்சியோடு காரியத்தில் கருத்தாய் இருக்கிறான்.


நான் அவனைக் கவனிப்பதை அவனும் பார்த்து விட்டான் போலும். முகத்தில் அதே இளஞ்சிரிப்போடு மறுபடியும் இதோ என்னை நோக்கி வருகிறான்.

“வீட்டில இருக்கிறவங்களுக்கு பலகாரம் வாங்கிட்டுப் போறிங்களா அண்ணே, தம்பி தங்கச்சிக்குக் கொடுக்கலாம், பாருங்க எல்லாம் சைவம்தான்”, கூடையை மறுபடியும் நீட்டுகிறான்.

அவன் முகத்தை பார்க்கிறேன். முன்பிருந்த அதே புன்னகையை பரிசளித்துக் கொண்டிருகிறான்.

“தம்பி, பலகாரம் எதுவும் வேண்டாம், இந்தா, இந்த காச வச்சிக்க” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் சட்டை பையில் சொருகுகிறேன். நன்றி கூறி நான் கொடுத்த நூறு ரூபாயோடு மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு ஓடுகிறான்.

இப்போதுஅவனது செயலைக் கண்டு அதிர்ந்து போகிறேன். நான் கொடுத்த பணத்தை வேறோருவனிடம் நீட்டிக் கொண்டிருக்கிறான்.

“தம்பி, இங்க வா”.


“பலகாரம் வேணுமாண்ணே”, ஒன்றூம் தெரியாதவன் போல் கேட்டுக் கொண்டு என்னருகே வருகிறான்.

“நான் கொடுத்த ரூபாய எதுக்கு அந்த ஆளுகிட்ட கொடுத்த?”.

“பாவம் அண்ணே அவரு, கண் தெரியாதவரு, இந்த பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பாரு, சாப்டாரா இல்லையானு கூடத் தெரியல”,


பணம் வாங்கிய அந்த மனிதனை நோக்கினேன். தூரத்தில் இருந்த அவனது நடை பாவனை அவன் குருடன் என்பதை நிச்சயப்படுத்தியது.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான், “சில சமயம் விற்றது போக மீதம் இருக்கும் பலகாரத்தை கொடுப்பேன், இன்னிக்கு காலையில் இருந்தே எந்த வியாபாரமும் இல்லை. நீங்க கொடுத்த காச மட்டும் கொண்டு போனால் அம்மா திட்டுவாங்க. முன்னே ஒருத்தர் இப்படிதான் காசு கொடுத்துட்டுப் போனாரு. வீட்டுக்குக் கொண்டு போனப்ப அம்மா கேட்டாங்க. என்னடா பலகாரம் விக்காம இருக்கு, காச மட்டும் கொண்டுவந்திருக்கியேனு. உள்ளத சொன்னேன். உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க. நான் இன்னும் தெம்பாக இருக்கேன் அண்ணே” எனக் கூறினான்.


அவன் மன உறுதியைப் பார்த்து நெகிழ்ந்துப் போகிறேன்.

“எல்லாம் எவ்வளவு தம்பி?”

“நானூத்தி இருபது ரூபாதாண்ணே”,


“எல்லா பலகாரத்தையும் நீங்களே வங்கிக்க போறீங்களா அண்ணே”,

நான் சரி என்பதற்கு அடையாளமாக தலை அசைக்கிறேன். பலகாரங்கள் அனைத்தையும் ஒரு பையில் போடுகிறான்.



பலகாரம் நிறப்பப்பட்ட பையை "நான்" வாங்கிக் கொண்டு, பணத்தைக் கொடுக்கிறேன். நன்றி கூறிய அவன் மீண்டும் ஒரு சிரிப்பை பரிசளித்துவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்புகிறான். அவன் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவனைப் பரர்த்துக் கொண்டிருக்கிறேன்.


எனக்குள் இருக்கும் "குருத்தன்மையை" உணரத் துவங்குகிறேன்........ யாரோ என்னை "பிச்சைக்காரா,பிச்சைக்காரா" என அழைப்பதுபோல் உணர்கிறேன்.  இவனும் எனக்குக் குருதானோ!!!!!!!


வாழ்க்கையின் எதார்த்தங்கள் இனிமையானது. துரோகங்களும், எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் ஏமாற்றமுமே வாழ்வை வளப்படுத்துகிறது. நாம் சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலரை எப்பொழுதோப் பார்த்திருப்போம், ஆனால் அவர்களின் நினைவுகள் நீங்காமல் நம்முடன் எப்பொழுதும் இருக்கும். இதற்குக் காரணம் நாம் அவர்களால் பெறப்பட்ட அனுபவங்களாகக் கூட இருக்கலாம். 


இந்தச் சிறுவனை மறுபடியும் என் வாழ்வில் சந்திப்பேனா என்பது சந்தேகம்தான். அவனது பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நிகழ்வு என்னிலிருந்து என்றும் மறையாது. அவன் என்றென்றும் எனக்குப் போதனை செய்த திருவண்ணாமலைச் சித்தன் தான்.

2 comments:

abarnavijay said...

அனைத்திலும் குருவைக் காணத் தூண்டிய எங்கள் ஸத்குருவே சரணம்.

gayathri said...

வாழ்வில் சந்திக்கும் ஒவ்வோவொரு மனிதனிடமும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன என்பதை இந்த கதையின் மூலம் நன்றாக புரியவைத்து விட்டீர்கள் மாஸ்டர்.குருவே சரணம் ..

Post a Comment