Total Pageviews

Friday, January 6, 2012

விழிப்புணர்வு - ஜென்கதை



ஒரு ஜென் ஆசிரமம். பல மாணவர்கள் அங்கே தங்கிப் பயின்றுவந்தார்கள்.

தினமும் காலை 11 மணிக்குத் தியான வகுப்பு. சுமார் ஐம்பது மாணவர்கள் ஒரு பெரிய மண்டபத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தியானம் செய்வார்கள்.

இந்த வகுப்பின்போது சில மாணவர்கள் தூங்கிவிடுவது உண்டு. எப்போதாவது குறட்டைச் சத்தம்கூடக் கேட்கும்.

இதனால் எரிச்சலடைந்த குருநாதர், தன்னுடைய தோட்டக்காரனை அழைத்தார். அவன் கையில் ஒரு சின்னக் குச்சியைக் கொடுத்தார். ‘தம்பி, உன்னுடைய வேலை, இந்த மாணவர்களைக் கவனிப்பது. யாராவது தூங்கி வழிவதுபோல் தெரிந்தால், அவர்களுடைய முதுகில் இந்தக் குச்சியால் ஒருமுறை தட்டு. விழித்துக்கொள்வார்கள், தியானத்தைத் தொடர்வார்கள். புரிந்ததா?’

’புரிஞ்சதுங்கய்யா!’ என்றான் அந்தத் தோட்டக்காரன். அதன்படி தினந்தோறும் மாணவர்களைக் கூர்ந்து கவனித்து, தூங்குபவர்களை உடனுக்குடன் எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தான் அவன்.

வருடக்கடைசியில், அந்த ஐம்பது மாணவர்களின் படிப்பு முடிவடைந்தது. எல்லோரையும் வழியனுப்பும் நேரம்.

அப்போது ஒரு மாணவன் கேட்டான். ‘குருவே, எங்கள் வகுப்பில் தியானத்தில் அதிகக் கவனமும் தேர்ச்சியும் பெற்றது யார்?’

குருநாதர் அரை விநாடியும் யோசிக்காமல் பதில் சொன்னார். ‘சந்தேகமென்ன? அந்தத் தோட்டக்காரன்தான்!’

No comments:

Post a Comment