Total Pageviews

Thursday, January 19, 2012

மீண்டும் ஒரு தேடல் 8



ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும் முடியாததும் ...









ஹிப்னாடிசம் செய்யப்பட்ட மார்கரைட்டின் சக்திகள் அத்துடன் முடிந்து விடவில்லை. பால் ப்ரண்டனுடன் வந்திருந்த பெண்மணியிடம் மார்கரைட்டின் கையைப் பிடித்துக் கொள்ள எட்வர்டு அடெஸ் சொல்ல அவரும் அப்படியே செய்தார்.

எட்வர்டு அடெஸ் சொன்னார். “யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள். அவர் உருவத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள்”

அந்தப் பெண்மணி தன் கணவரின் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மார்கரைட் அந்தப் பெண்மணியின் கணவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய உருவம், குணங்கள், திறமைகள் பற்றியெல்லாம் விவரித்தார். அந்த மனிதர் ஒரு அரசாங்க அதிகாரி என்பதையும் சொன்னார். (அந்தப் பெண்மணியைக் கூட்டி வந்த போது அவர் என் நண்பர் என்று சொன்னாரே ஒழிய வேறு விவரங்கள் சொல்லி இருக்கவில்லை).

(ஆனால் மார்கரைட் இன்னொரு சந்தர்ப்பத்தில் பால் ப்ரண்டனுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்ட போது அவை முற்றிலும் தவறாக இருந்ததாக பால் ப்ரண்டன் கூறுகிறார். ஆனால் பால் ப்ரண்டனுடைய எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள் பற்றி எல்லாம் கூற முற்பட்ட போது அவை மிகச் சரியாகவே இருந்தன. இது போன்ற ஹிப்னாடிச நிலைக்குக் கூட எதிர்காலம் புரியாத புதிராகவே இருக்கிறது என்று பால் ப்ரண்டன் நினைத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஹிப்னாடிசம் மூலம் மனதில் உள்ளதையும், ஆழ்மனதிற்குத் தெளிவாகத் தெரிந்ததையும் சொல்லலாமே ஒழிய ஆழ்மனமே அறியாத இரகசியங்களை அறிந்து கொள்ளுதல் இந்த நிலைக்கு சாத்தியமல்ல. உதாரணத்திற்கு தன் கணவர் குணாதிசயங்கள் அந்தப் பெண்மணிக்கு நன்றாகத் தெரிந்து இருந்ததால் அந்தப் பெண்மணியின் கணவரின் முழு விவரங்களை மார்கரைட்டால் சொல்ல முடிந்தது. அதே போல் பால் ப்ரண்டனின் இலட்சியம் மற்றும் எண்ணங்கள் அவர் அறிந்திருந்ததால் அதையும் அவர் மனம் மூலம் மார்கரைட் அறிய முடிந்தது. பால் ப்ரண்டனின் எதிர்காலம் பால் ப்ரண்டனே அறியாத ஒரு இரகசியமாக இருந்ததால் மார்கரைட்டிற்கு அவர் மனம் மூலம் அதை அறிய முடியவில்லை. ஆனாலும் அவர் ஏதோ முயற்சி செய்து அது பொய்யாய் போயிருக்கிறது. எதிர்காலத்தை அறிய ஹிப்னாடிசத்தை விட உயரிய யோக நிலைக்குப் போனால் ஒழிய அது சாத்தியமில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்)

அடுத்ததாக ஹிப்னாடிசத்தின் மூன்றாம் நிலைக்குத் தன் மனைவியை எட்வர்டு அரெஸ் அழைத்துச் சென்றார். அந்த நிலையில் ஒரு கூர்மையான ஊசியை எடுத்து மார்கரைட்டின் கையில் குத்தினார். ஊசி அரையங்குலம் உள்ளே சென்றாலும் மார்கரைட் வலியை உணரவில்லை. மாறாக எட்வர்டு கேஸ் ஒரு கோமாளி எதிரே நின்று கொண்டு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மார்க்கரைட் விழுந்து விழுந்து சிரித்தார்.

அந்த ஊசியை வெளியே எடுத்த போது குத்திய இடத்தில் இருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளி வரவில்லை என்பது தான் ஆச்சரியம். குத்திய இடத்தில் அடையாளமாக ஒரு கரும்புள்ளி மட்டுமே தெரிந்தது.

பின்னர் எட்வர்டு அடெஸிடம் பேசும் போது இந்த அற்புதமான சக்திகளைப் பற்றி பால் ப்ரண்டன் கேட்டார். ஒரு காலத்தில் ஒரு கல்லூரியில் மனோதத்துவ விரிவுரையாளராக இருந்த எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “உண்மையை சொல்லப் போனால் இந்த சக்திகளைப் பற்றி முழுவதும் எனக்குத் தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஏன் ஆகிறது, எதனால் ஆகிறது, எப்படி ஆகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த சக்தி புதைந்து கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில பயிற்சிகள் மூலம், சில முறைகள் மூலம் அந்த சக்திகளை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்பது மட்டும் உண்மை”

”இதை உணர்ந்த போது நான் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். நான் முன்பே சொன்னது போல ஆரம்பத்தில் என் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த நிறைய நேரம் தேவைப்பட்டது. அந்த நிறைய நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் அவளை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த முடிந்தது முறையான, தொடர்ந்த பயிற்சியால் தான். ஹிப்னாடிசத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலை உள்ளவர்களை மட்டுமே அதில் ஆழ்த்த முடியும். மேலும் ஹிப்னாடிசம் செய்பவர்களுக்கும் தங்கள் சக்தி மேல் முழு நம்பிக்கை இருந்தால் ஒழிய மற்றவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது..”

பால் ப்ரண்டன் கேட்டார். “கண்களைக் கட்டிய பின்பும் அவரால் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்ததும், உங்கள் செயல்களைக் காண முடிந்ததும் எப்படி?”

எட்வர்டு அடெஸ் சொன்னார். “நம் ஐம்புலன்களும் வேலை செய்வது அந்தந்த உறுப்புகளால் தான் என்று நாம் எண்ணினாலும் நம்முடைய ஆழ்மனம் அந்த உறுப்புகளின் உதவியில்லாமலேயே அதை செய்ய முடிகிறது என்பதும் உண்மை தான். அதைத் தான் நீங்களே நேரில் பார்த்தீர்களே. ஆனால் நம் மேலோட்டமான மனதிற்கு அது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் நம் மேல்மனம் எத்தனையோ தவறான நம்மை மட்டுப்படுத்துகிற நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. ஆழ்மனதின் ஆதிக்கத்திற்குச் செல்லும் போது அந்த நம்பிக்கைகள் அறுபட்டுப் போகின்றன.”

பால் ப்ரண்டன் கேட்டார். “சிலர் ஹிப்னாடிசம் செய்யும் போது ஏதாவது சொல்லிக் கொண்டே கைகளை அசைத்து ஹிப்னாடிசம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதெல்லாம் செய்யவில்லையே. அப்படி எல்லாம் செய்யத் தேவையில்லையா?”

”அது அந்தந்த நபர்களைப் பொறுத்தது. நான் என் உள்ளே உள்ள சக்தியை நம்புகிறேன். பயிற்சி பெற்றுத் தேர்ந்த பின் அவை அவசியமானதல்ல என்று நான் நினைக்கிறேன்”

எட்வர்டு அடெஸும், மார்கரைட்டும் சித்தர்கள் அல்ல என்றாலும் மனோவசியம் என்ற ஹிப்னாடிச அறிவியல் முறையில் பால் ப்ரண்டனுக்குச் செய்து காட்டிய பல சித்திகள் வியப்பளிக்க வைக்கின்றன அல்லவா?

அடுத்ததாக பால் ப்ரண்டன் சந்தித்த நபர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு அவதூது. உடலெல்லாம் ஆணியாலும், கத்தியாலும் பல முறை குத்திக் கொண்டும் பாதிக்கப்படாமல் இருந்தவர். தண்ணீரினுள்ளும், மணலின் உள்ளும் மணிக்கணக்காய் ஒரு நாளுக்கும் மேல் புதைந்து கிடந்து பின் பாதிக்கப்படாமல் மேல் எழுந்தவர். பல சர்ச்சைகளில் பேசப்பட்டவர். ஆனால் அலட்சியமாக ஒதுக்க முடியாத மனிதராக அந்தக் காலத்தில் பலர் கவனத்தையும் கவர்ந்தவர். பால் ப்ரண்டன் அந்த அவதூதைக் காண ஆவலுடன் சென்றார்.

அந்த அவதூதர் யார் தெரியுமா?


(தேடல் தொடரும்)
நன்றி;என் கணேசன்                                                                                         


No comments:

Post a Comment