Total Pageviews

Thursday, January 5, 2012

யோகத்தேடல் 4




பால் ப்ரண்டன் சந்தித்த இன்னொரு சித்தர் விசுத்தானந்தர். அவரது சக்திகள் வித்தியாசமானவை. அவர் எந்த ஒரு பூவின் நறுமணத்தையும் தானிருந்த இடத்தில் ஏற்படுத்த முடிந்தவராக இருந்தார். ஒரு பூதக் கண்ணாடியின் மூலம் ஒரு கைக்குட்டையில் சூரிய ஒளியைக் குவித்து மற்றவர்கள் நினைத்த எந்த நறுமணத்தையும் ஏற்படுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் திபெத்தில் மட்டுமே மலரக் கூடிய ஒரு மலரை எண்ண, அவர் அந்த மலரின் நறுமணத்தையும் வரவழைத்துக் காட்டி பால் ப்ரண்டனை ஆச்சரியப்படுத்தினார்.

வேறெதாவது சக்திகள் அவரிடம் உள்ளதா என்று பால் ப்ரண்டன் கேட்க விசுத்தானந்தர் ஒரு சிட்டுக் குருவியை அவர் முன்னாலேயே கழுத்தை நெரித்துக் கொன்று அது இறந்து விட்டதா என்பதை பால் ப்ரண்டனை உறுதிபடுத்திக் கொள்ளச் சொன்னார். பின் தன் கையிலிருந்த பூதக் கண்ணாடி மூலம் சூரிய ஒளிக்கதிர்களை ஒன்றாகக் குவித்து இறந்த சிட்டுக் குருவியின் ஒரு கண்ணில் குவித்து மறுபடியும் உயிர்ப்பித்துக் காட்டினார். சிட்டுக் குருவி மறுபடி உயிர்பெற்று அசைந்து நடந்து சிறிது தூரம் பறந்து சென்றதைக் கண்ணால் பார்த்த பால் ப்ரண்டன் பிரமித்துப் போனார். அந்த உயிர் பெற்ற பறவை அரை மணி நேரம் வாழ்ந்து பின் இறந்து போனது.

மரணத்தையும் வெல்ல முடிந்த சக்தி படைத்த விசுத்தானந்தர் பால் ப்ரண்டன் இந்தியா வந்த காரணத்தை அறிந்து சொன்னார். "தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை..."

அதே செய்தியைத் தான் பால் ப்ரண்டன் சந்தித்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களும் சொன்னார். பால் ப்ரண்டனைப் பல இடங்களில் தொடர்ந்த ஒரு மனிதர் "நீங்கள் தேடும் யோகியை நான் காட்டுகிறேன். அவரை எனக்குத் தெரியும்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் வார்த்தையில் பால் ப்ரண்டனுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மனிதர் தொடர்வதை நிறுத்தவில்லை. கடைசியில் பால் ப்ரண்டன் அவர் சொன்ன நபரையும் சந்திப்பதில் தனக்கு நஷ்டமேதும் இல்லை என்று நினைத்து "நீங்கள் சொல்லும் யோகி எங்கிருக்கிறார்?" என்று கேட்க, அவர் திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியைப் பற்றி சொன்னார்.


பால் ப்ரண்டன் ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார். 



ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமண மகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். 


சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன் உணர்ந்தார். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவருடைய மனதில் இருந்து தானாக உதிர்ந்தன. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரமைதியை பால் ப்ரண்டன் அந்த இடத்தில் உணர்ந்தார். கேள்விகள் இல்லாத பதில் தேவைப்படாத எதனாலும் பாதிக்கப்படாத ஒரு ஆனந்த நிலையை பால் ப்ரண்டன் அனுபவித்தார்.

மற்றவர்கள் காட்டிய அபார சக்திகள் எல்லாம் இந்த அமைதியின் முன் ஒரு பொருட்டாகவே பால் ப்ரண்டனுக்குத் தோன்றவில்லை. தான் தேடி வந்த யோகியை அந்தக் கணமே பால் ப்ரண்டன் அடையாளம் கண்டார். அவருடையத் தேடல் முடிவுக்கு வந்ததாக அவர் உணர்ந்தார். அங்கேயே சில காலம் தங்க பால் ப்ரண்டன் தீர்மானித்தார்.














(தேடல் தொடரும்)





No comments:

Post a Comment