Total Pageviews

Thursday, January 5, 2012

யோகத்தேடல் 3




பால் ப்ரண்டன் இந்தியாவில் கண்ட அபூர்வசக்திகள் படைத்தவர்கள் அனைவருமே யோகிகள் அல்ல. இங்கிலாந்தில் அவரிடம் அந்த இந்தியர் சொன்னபடி முறைப்படி ஏதாவதொரு விதத்தில் அந்த சக்திகளைப் பெற்றிருந்த, யோகிகள் வரிசையில் சேர்க்க முடியாத மனிதர்களும் இருந்தார்கள். அப்படி ஒரு பக்கிரியை அவர் பர்ஹாம்பூரில் பார்த்தார். பணம் கேட்டு வந்த அந்தப் பக்கிரி தன்னிடம் விசேஷ சக்தி இருப்பதாகச் சொல்ல, பால் ப்ரண்டன் அதைக் காண்பிக்கச் சொன்னார்.


அந்தப் பக்கிரி பால் ப்ரண்டனின் முன்னிலையில் தன் வலது கண்ணைத் தோண்டி எடுத்தார். அதைக் காண சகிக்காத பால் ப்ரண்டன் திரும்பவும் வைத்துக் கொள்ளச் சொல்ல அந்தப் பக்கிரி அப்படியே அந்தக் கண்ணைத் திரும்பவும் சுலபமாகப் பொருத்திக் கொண்டார். கண்ணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எந்த உபகரணங்களும் இல்லாமல் சர்வ சகஜமாக அப்படி எடுக்கவும் திரும்ப பொருத்திக் கொள்ளவும் முடிந்த அந்தப் பக்கிரியிடம் "இது எப்படி சாத்தியமாகிறது?" என்று பால் ப்ரண்டன் கேட்க அந்தப் பக்கிரி அதை விளக்க மறுத்து விட்டார். "ஐயா, இது ஒரு குடும்ப ரகசியம். இந்த வித்தை தந்தை மகனுக்கு, மகன் தன் மகனுக்கு என பரம்பரை வழிகளில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது" என்றார்.

இது போன்ற வித்தைகளால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வி பால் ப்ரண்டன் மனதில் எழுந்தது. அவர் தன்னிடமிருந்த பணம் சிறிது கொடுத்து அவரை அனுப்பி விட்டார். இது போன்று காசு பணத்திற்காக வித்தை காட்டும் மனிதர்கள் இருக்கும் இந்த தேசத்தில்தான் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகா சித்தபுருஷர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நேரடி சீடர்களில் ஒருவரான "மஹாசாயா" என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மஹாசாயாவிற்கு மிகவும் வயதாகியிருந்தது. மஹாசாயா கல்கத்தா கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், வரலாறு, அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அப்படிப்பட்ட ஒரு உயர் கல்வியாளர் ராமகிருஷ்ணர் என்ற கல்வியறிவில்லாத ஞான சித்தரிடம் ஈர்க்கப்பட்டு சீடராக மாறியது பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ணரின் ஞான சக்தியின் மேன்மையை உணர்த்தியது. ராமகிருஷ்ணரைப் பற்றி அந்த நேரடி சீடரிடம் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மஹாசாயா தன் குருவைப் பற்றிப் பேசும் போது புதிய மனிதராகவே மாறி விட்டார். ".....ராமகிருஷ்ணர் பணம், பதவி, புகழ், கர்வம், சொத்துக்கள் எல்லாம் ஆத்ம ஞானத்தின் முன் தூசுகளே என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தார். அந்த நாட்கள் அருமையானவை. அந்த மகான் யோக நிலைக்குச் சென்று அமர்ந்திருப்பார். சுற்றியுள்ள நாங்கள் அவரைக் குருவாக அல்லாமல் இறைவனாகவே கண்டோம்....அப்படிப்பட்ட சக்தி அவர் இருக்கும் அந்த அறையெங்கும் பரவியிருக்கும். அவர் ஒருவரிடம் இறையுணர்வு ஏற்படுத்த, தானிருக்கும் யோக நிலைக்கு இழுத்துச் செல்ல பெரிதாக எதுவும் செய்யத் தேவையிருக்கவில்ல. அவர் லேசாகத் தொட்டால் போதும். அந்த தெய்வானுபவம் கிடைத்து விடும். அந்த அனுபவத்தின் பேரானந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை......"

ஜென்ம ஜென்மங்களாக தவமிருந்து பெறக் கிடைக்கும் அனுபவத்தை தன் தொடுதலாலேயே ஏற்படுத்த முடிவது ஒரு ஒப்பற்ற சக்தியல்லவா? விவேகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்தி அல்லவா அவர் தன் வழிக்கு இழுத்தார். ஒரு நரேந்திரனை விவேகானந்தராக்கிய பெருமை அதனாலல்லவா கிடைத்தது.? ராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க முடிந்த காலத்தில் இந்தியா வராவிட்டாலும் மஹாசாயா போன்ற அவரது நேரடி சீடரைச் சந்திக்க முடிந்ததில் பால் ப்ரண்டன் மனம் நிறைவாக இருந்தது.

கல்கத்தாவில் மருத்துவராக இருந்த டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் பால் ப்ரண்டனுக்கு யோகிகள், யோக சக்திகள் மேல் இருந்த ஆர்வத்தை அறிந்து யோகி நரசிங்கஸ்வாமி பற்றி சொன்னார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா சொன்னார்.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார்.  கொடிய விஷம் மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

(பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார். இயற்கைக்கு மாறாக மனிதனால் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்றாலும் அதில் அதிகக் கவனம் வேண்டும். கவனக் குறைவும், சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் அலட்சியமும் உயிரையும் குடித்து விடும் என்பதற்கு நரசிங்கஸ்வாமி ஒரு நல்ல உதாரணம்,  அதுமட்டுமல்ல நண்பர்களே! எவ்வளவுதான் யோக சித்திகள் பெற்றாலும் ஒருநாள் இந்த சரீரம் அழியத்தான் வேண்டும்.  சித்தர்கள் தங்களுடைய சரீரத்தை கல்பமாக்கியதெல்லாம் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையினால் அல்ல.  ஞானம் அடைவதற்கு முன்னால் இந்த சரீரம் அழிந்து போய்விடக்கூடாதே என்பதற்காகத்தான். மேலும் வாழைமட்டை போலத் தன்னை உணர்ந்து கொள்ளாமல் துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும் நமக்கு ஞானத்தைப் போதிக்க அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டிய அவசியமிருந்தது....    இது சித்தர்கள் மானுடத்தின் மீது கொண்டிருந்தக் கருணை என்று கூடச் சொல்லலாம்)

பால் ப்ரண்டன் சந்தித்த மற்ற சக்தியாளர்களையும் அவர் மனதில் இருந்த யோகிகளின் குணாதிசயங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர் கண்ட மஹா யோகியையும் அடுத்த பதிவில் காணலாமா?















(தேடல் தொடரும்)

No comments:

Post a Comment