Total Pageviews

Tuesday, October 25, 2011

யோகத் தீபாவளி
யோகயுவகேந்திரா உறவினர்களுக்குத் தீபாவளி  நல்வாழ்த்துக்கள்!

முத்தீ, என மூன்று வகையான நெருப்பைப் பற்றி யோக பாடத்தில் குறிப்பிடப்படுகிறது. சூரியன்,சந்திரன், அக்னி இவை மூன்றுமே முத்தீ எனப்பெயர் பெறுகிறது. இருட்டை விரட்டுவதையே இந்த மூன்று நெருப்புகளும் செய்தாலும், அக்னி, மனித முயற்சியால் உண்டாக்கப் படக்கூடியது. எனவே அக்னிக்குப் பெருமை அதிகம். மனித உடலிலும் இந்த மூன்று நெருப்புகளும் முக்கியமானவை. 

சூரிய கலையாகிய வலது சுவாசமும், சந்திர கலையாகிய இடது சுவாசமும், மனித முயற்சியின்றியேத் தானாகச் செயல்படக்கூடியது. ஆனால் அக்னியாகிய சுழுமுனையை மனித முயற்சியாலேயே செயல்படுத்தமுடியும். அக்னி மேல் நோக்கியே செல்வதுபோல் சுழுமுனையும் மேல்நோக்கியே செயல்படும். இந்த அக்னியாகிய சுழுமுனை சுவாசத்தை "வளி" யாகிய வாசிக்காற்றைக்கொண்டு ஊதி ஊதி, நெருப்பாக்கி, அந்த அறிவு "தீபத்தால்" அஞ்ஞான இருட்டை விரட்டி, வெற்றி கண்டவர்கள் கொண்டாடும் வைபவமே "ராஜயோகத் தீபாவளி".

கிருஷ்ண பரமாத்மா, நரகாசூரனை வதம் செய்த நாளையே தீபாவளி என்று கொண்டாடுகிறோம். நரகாசூரன், பூமாதேவியின் புதல்வன். பூமாதேவி என்பவள் மண்ணின் அம்சம்,அதனால் பூமாதேவியின் மகனான நரகாசூரனுக்கும் "பெளமண்" என ஒரு சிறப்பு பெயருண்டு. பெளமண் என்றால் மண்ணால் செய்யப்பட்டவன் எனப்பொருள். பெளமண் மண்ணால் ஆனவன், மகான்களை மதிக்கத்தெரியாதவன், அஹங்காரம் கொண்டவன். ஆகையால் ஆத்மபலத்தை விட உடல் வலிமையே பெரிதென நினைத்து ஆத்ம உணர்வில்லாமலிருந்தவன். தான் பெற்ற உடல் பலத்தால் எல்லோரையும் ஆட்டி வைத்தவன்.

பஞ்ச பூதங்களால் ஆன மனித சரீரத்தில், சதை, எலும்பு, நரம்பு முதலியவைகள் மண்ணால் செய்யப்பட்டவை. எனவேதான் வாழ்க்கையின் இறுதியில் இவை, மறுபடியும் மண்ணுக்கே அர்ப்பணமாகிறது. 

நரகாசூரன் பரிபாலனம் செய்து வந்த நாட்டின் பெயர் "பிராகஜோதிஷபுரம்"

"பிராக" என்றால் மூலத்தில் "தான்" எப்படி இருந்தோம் என்பதைப் பற்றிய உணர்வு. "ஜோதி" என்றால் மேம்பட்ட அறிவு . "ஷ" என்பது மறந்து போதல். தான் மூலத்தில் என்னவாக இருந்தோம் என்பதான மேம்பட்ட அறிவை மறந்துபோன நாட்டை ஆட்சி செய்தவனே "நரகாசூரன்"

ஆத்ம தத்துவத்தை உணர்ந்துகொண்ட ஜீவனுக்கே "நரன்" எனப்பெயர். இந்த மண்ணாலான "உடல்" நானல்ல, மூல வஸ்துவான ஆத்மனே "தான்" என்பதை உணர்ந்து கொண்டவனே நரன். இந்த ஆத்ம தத்துவத்தை உணராமல் தேக அபிமானத்தோடு வாழ்பவனே "நரகாசூரன்" 

இந்த மண்ணாலாகிய தேகத்தையே "நான்" என நம்பச்செய்து உண்மையான "தானை" மறக்கச் செய்யும் "மனமாகிய" நரகாசூரனை அழிப்பதே "ஞானயோகத் தீபாவளி".

நரகாசூரனைக் கொன்றது கிருஷ்ணபரமாத்மா எனக் கொண்டாலும், கிருஷ்ணருக்கும், நரகாசூரனுக்கும் நடந்த போரில், நரகாசூரன் விட்ட மகாசக்தி சூலம் கிருஷ்ணனை மயங்கி விழச்செயகிறது. கிருஷ்ணரால் தனித்துப் போராட முடியவில்லை, சத்யபாமாவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார். அதன்பின்பே அவரால் வெற்றி பெற முடிகிறது.

ஆத்மஉணர்வான சிவநிலையை அடைவதற்கு மாயையான நரகாசூரனை வதம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனால் "சுழுமுனைச்" சக்தியான கிருஷ்ணனால் தனித்துப் போராடி மனமாகிய நரகாசூரனை வெற்றிகொள்ள முடியவில்லை. அவருக்கு "இடைகலை" சுவாசமாகிய சத்யபாமாவும் துணைக்கு வரவேண்டியது அவசியமாகிறது. "எங்கே இருக்கினும் பூரி இடத்திலே" எனும் சித்தர்களின் யோகமும், ஞானமும் கலந்த இந்த சூட்சும ஆன்மீக ரகசியத்தை உணர்ந்து கொண்டவர்களின் தீபாவளி "சிவராஜயோகத் தீபாவளி"

மண்ணால் செய்யப்பட்ட மட்பாண்டமே அகல்விளக்கு. அதில் சுடர் குடியேறிவிட்டால் அது வணங்கத்தக்கதாக மாறுகிறது. வழிபடு பொருளாக மலர்கிறது. மங்கலப்பொருள் என மதிக்கப் பெறுகிறது. 

நமது உடலும் மட்பாண்டமே! அதில் சுடர்விடும் மங்கள நெருப்பே ஆத்மன். இந்த ஆத்ம நெருப்பு இறைவனின் அம்சம் என்ற தெளிவு பிறந்தால் _ "நாமும்" இறைவனே என்கிற அத்வைத ஞானம் மலர்ந்தால் உடலாகிய மண்விளக்கும் மங்கலப்பொருளாக மதிக்கப்படும்! ஆத்ம நெருப்பின் சூடு இன்று எல்லோரிடத்திலும் இருக்கிறது! ஆனால் ஆத்மநெருப்பின் ஒளி இன்று நம்மிடம் இருக்கிறதா? ஒளியேற்றும் சூட்சுமம் தெரிந்து கொண்டால் தினம் தினம் தீபாவளிதான்!

நீ பார்க்கும் வெய்யோன், நிலவு, அக்கினியுடுவாந்

தீபாவளிகள் செடமாகும்- நீ பார்ப்போன்,

தீபாவளிச் சுடருன் திருட்டியாற் றானீயே

தீபாவளி மூலந்தேர்.....................................................................ரமண பகவான்.

Monday, October 24, 2011

இப்படிக்கு நரகாசூரன்.
என்ன நல்லாயிருக்கீங்களா. என்னை ஞாபகமிருக்கா? அட்லீஸ்ட் என் பேரையாவது கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? அல்ரெடி என்னைப் பத்தி தெரிஞ்சவங்க ஒதுங்கிக்கோங்க. ..........

நான் புராணகாலத்து ஆளு.   பவர்ஃபுல் ஃபேமிலி பேக்ரவுண்டு.   அப்பா, பகவானின் அவதாரமான வராகர்.     அம்மா, இன்னைக்கும் உங்க பாரத்தையெல்லாம் பொறுமையா தாங்கிகிட்டு - அதே சமயம் கோபம் வந்தா ஒரு உலுக்கு உலுக்கி சுனாமியால உங்களை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி வைக்கும் பூமாதேவி.

பிராகஜோதிஷ என்ற நகரத்தைக் கட்டி ஆண்டவன்.சுற்றி, கிரிதுர்க்கம்; அக்னி துர்க்கம்; ஜல துர்க்கம்; வாயு துர்க்கம்ன்னு நாலு கோட்டைகளை கட்டிக் கொடிகட்டி வாழ்ந்தவன். என்னை மீறி ஒரு பயல் உள்ளார வந்துட முடியாது.     நானும் சோப்ளாங்கியில்லை.    வில்லாதி வில்லன்.    அதனாலே அசுரன்னு கூப்பிட்டாங்க.     என்னோட மிலிட்டரியும் அப்படி தான். நாஜி படைங்களை விட மோசம். லேசா நான் கண் ஜாடைக் காண்பிச்சாலே போதும்,நம்மாளுங்க எதிராளிங்களைக் கடிச்சி குதறாம திரும்ப மாட்டானுங்க. 


தேவருங்கன்னு சொல்லிகிட்டு இந்திரன் பின்னாலே ஒளிஞ்சிகிட்டு திரிஞ்சவனுங்கல்லாம், எங்க கிட்ட பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்ல. இப்படித் தான் ஒருநாள், இந்த இந்திரன், என்னையப் பத்தி கிருஷ்ண பகவான் கிட்ட 'போட்டுக் கொடுக்க', கிருஷ்ணர் படையோட போருக்குக் கௌம்பி வந்துட்டாரு. கூட, வில்லும் அம்புமாய் அவரோட சம்சாரம் சத்யபாமா. 

உக்கிரமான சண்டை. ஒரு கட்டத்திலே, நான் விட்ட மகாசக்தி சூலம் தாக்கி பகவான் மயங்கி விழ, கோபமாகிப் போன சத்யபாமா விட்ட அம்பில் நான் அடிபட்டு ரத்தச் சகதியாய் சரிந்த அந்த கிளைமாக்ஸில் தான் தெரிஞ்சது, என்னோட அம்மாவான பூமாதேவியோட அம்சம் தான் சத்யபாமான்னு. சந்தோஷமாயிடுச்சு. உடனே, 'நான் சாகும் இந்த தினத்தை உலகமெல்லாம் சுபதினமாய் ஜனங்க கொண்டாடணும்' னு வரம் கேட்டு, அதுக்கு அம்மாவும் பகவானும் 'ஓகே' சொன்னதை காதாறக் கேட்ட பிறகே திருப்தியாய் கண்ணை மூடினேன். இப்படியான ஒரு வரத்தை சாகுற நேரத்திலேயும் தவறாமக் கேட்டு வாங்கின ஒரு ஜீவன் , ஈரேழு பதினாங்கு லோகத்திலேயும் என்னைத் தவிர வேறு யாருமிருக்க முடியாது. 


இதுக்காகவே இந்த மாசம் 26ம் தேதி அமாவாசை அன்னைக்கி வர்ர என்னோட நினைவு நாளன்னிக்கி அதாங்க, தீபாவளின்றீங்களே அன்னிக்கு தினமலர்லியோ, இல்லே தினத்தந்தியிலியோ, முழுப் பக்கத்துக்கு நினைவஞ்சலி விளம்பரம் கொடுக்கலாம். 

ஆனா, நீங்க மாட்டீங்க. தெரியும். ஏன்னா, என்னாலே உங்களுக்கு பைசா பிரயோஜனமில்லைனு நினைக்கிறீங்க. எத்தனயோ ஆயிரமாயிரம் வருஷங்களாய் என்னாலே எத்தனையோ கோடி பேருக்கு ஆதாயம், ஆனந்தம் கிடைச்சிட்டு வருதுன்னு யோசிக்க உங்க (மனுஷ) சுபாவப்படி சவுகரியமாய் மறந்திடுறீங்க. 

குடிசையிலே உட்கார்ந்து பட்டாசுக்கு திரி, பத்த வைக்க ஊதுபத்தி திரிச்சு தருகிற தேவநேசன், பிளாட்பாரத்தில் பட்டாசுகளைப் பரப்பி விற்கிற காதர்பாய், மைசூர்பாக் செய்து விற்கிற ராமாராவ் முதல் ஜவுளி சரக்குகளை லாரியில் அனுப்பிய கையோடு லட்சங்களை எண்ணி கல்லாவில் போடும் ராம்லால்சேட் வரை பேதங்களில்லாம தீபாவளி சீசன்லே பணம் பாக்கறாங்கன்னா அது யாராலே ? 


அதே போல, தீபாவளி கொண்டாட்டத்தை சொல்லுங்க. அதை அடிச்சிக்க முடியுமா? ஆயிரம் பண்டிகைகள் வந்து போகட்டுமே, ஜனங்களுக்கு தீபாவளி சந்தோஷம் கொண்டாட்டம் எப்பவுமே ஸ்பெஷலாச்சே ! இதை இன்னைக்கு நேத்தா பாக்கறேன் !! வெளி தேசத்திலே இருந்து தாடியோட குதிரையிலே வந்தவங்க, கப்பல்லே வெள்ளை வெளேர் தோலோட வந்திறங்கினவங்க காலத்தேயும், பிறகு சட்டையிலே ரோஜாப் பூவைச் சொருகிகிட்டிருந்தவரு, அவரு பொண்ணு, பேரன் காலத்தேயும் பார்த்துக் கிட்டுதான் வரேன்.


ஒரு மாசத்துக்கு முன்னாலேயே ஜனங்களுக்கு தீபாவளி மூடு தொத்திக்கும். வீட்ல பொம்பளைங்க பட்சணங்க செய்யற முஸ்தீபுகளை அப்பவே ஆரம்பிச்சிடுவாங்க. பொடுசுங்க பட்டாஸ், புதுத் துணிக் கனவுலே அலைஞ்சிகிட்டிருக்கும். தீபாவளி அன்னிக்கு முந்தின நாள், அடுத்தவங்க முழிச்சிகிட்டாங்களானு ஒருத்தரை ஒருத்தர் எட்டி பார்த்துக்கிட்டே விடிய விடியத் தூங்காம சிறுசுகள் படுகிறபாடு, நாலு மணிக்கே பரபரன்னு எழுந்து அன்றைக்கு மாத்திரம் அழாமல் தலைக்கு குளிச்சி சீயக்காய் விழுந்து, சிவந்த கண்களோடு பட்டாசுடன் வாசலுக்கு ஓடும் துள்ளல்; பக்கத்து வீடுகளுக்கு தட்டுகளில் பட்சணங்கள் பரிமாற்றும் அம்மாக்களின் ஆர்வம்; குடும்பத்தோடு ஈவ்னிங் ஷோ தியேட்டருக்கு படையெடுக்கும் அன்னியோன்யம். 


காலம் காலமாய் எந்த படையெடுப்புக்கும் ; சித்தாந்தங்களுக்கும் வளைஞ்சிடாம அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏத்தபடி அனுபவிக்கப்படுகிற இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை இதுவரை பாத்துகிட்டுத் தானிருக்கேன். ஆனா, இது, இந்த பிடிமானம் எத்தனை நாளைக்குத் தாக்குபிடிக்குமோன்னு இப்போ பயம் தோணுது. 

ரத்தமும், சதையுமாய், உணர்ச்சிகளோட, மனுஷனாய் இருந்தவன், இப்போ எலக்ட்ரானிக் சாதனங்களின் உதிரிபாகங்கள்லே ஒன்னாயிட்டான். வாழ்க்கையை மணிபர்ஸிடமும், கைகடிகாரத்திடமும் அடமானம் வெச்சிட்டு அரிச்சந்திரன் மாதிரி அடிமையாய் பின்னாலேயே போயிட்டிருக்கான். சந்தோஷமானாலும், துக்கமானாலும் ஒரிஜினாலிட்டி இல்லை.தீபாவளியை ஏற்படுத்தித் தந்ததுக்கு கைமாறா உங்ககிட்ட நான் கேட்பதெல்லாம் இதைத் தானுங்க.


.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வேஸ்டுங்க. வாழ்க்கையை உணர்வுபூர்வமாய் பாருங்க. இயல்பா இருக்கப் பழகுங்க,அதோட ஒவ்வொரு கட்டத்தையும் தவற விடாம அந்தந்தக் காலத்திலேயே சுயமாய் இருக்கப் பாருங்க. தீபாவளிப் பண்டிகை மாதிரியான சந்தோஷ சந்தர்ப்பங்களில் வாழ்த்துக்களை வெளிப்படுத்துங்க; முகமூடியை கழற்றி வெச்சிட்டு.'வெளியே வாங்க, 


ஜகா வாங்கிகிறேனுங்கோ...... இப்படிக்கு.... நரகாசூரன்

Thursday, October 20, 2011

துரோகத்துக்கம்


                 குருஷேத்திரத்தின் இறுதி நாள் . எல்லா இடத்திலும் மரண அழுகை மட்டுமே மிஞ்சி இருகிறது. குருஷேத்திரம் என்று சொல்லக்கூடிய ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடக்கிறான். மண்ணாசைக் கனவுகள் கலைந்து மரணக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் தோன்றத் துவங்கி இருந்தது. துரியோதனின் வாய் வறண்டு கிடந்தது. கண்கள் சொருகி இருந்தன. துரியோதனனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியோதனின் முகத்தில் தெளித்தான்.


அஸ்வத்தாமனின் மனம் துரோகத்தால் துவண்டு கொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், கோபமும் அவனை அலைக்கழிக்கத் தன்னை ஆழியில் அகப்பட்டத் துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் கோபமும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரப் போர்க்களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் கடமையை நிறைவேற்றி அழியாப்புகழ் பெற்று வீரசொர்க்கம் அடைந்தனர். துரோணத்தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியோதனா! என்னால் ஏதும் செய்ய முடியாது, நான் ஒரு கோழை என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'"துரியோதனா! என் நண்பனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" கோபம் கலந்த பதட்டத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.


துரியோதனன் மெல்ல கண் திறந்தான்."அஸ்வத்தாமா! போர் முடிவுக்கு வந்து விட்டதா? எல்லாரும் இறந்துவிட்டர்களா? என் சொந்தங்களில் எவரேனும் மிஞ்சி இருக்கிறார்களா? என் தாய் நாட்டைக் காக்க "நான்" முன்னெடுத்த போர் முடிந்ததா? பாண்டவர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபரி பாலனத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?""இல்லை துரியோதனா! இன்னும் போர் முடியவில்லை!எனது பங்கு இன்னும் இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். கட்டளையிடு... பாண்டவரின் வம்சத்தை பூண்டோடு அழித்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"பிளக்கப்பட்ட தொடையின் வலி முகத்தில் வேதனையாக வெளிப்பட, துரியோதனனின் முகத்தில் உயிரின் அரும்பு மீண்டும் துளிர்த்தது.. சற்றே உடலை அசைத்து எழுந்தான். தன் ரத்தம் கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் எனது படையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா.உனக்கு செய்த துரோகத்துக்கு பழி தீர்த்துக்கொள்ள நேரம் கிடைத்துவிட்டது. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் இறுதி மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"அஸ்வத்தாமா துடிப்புடன் எழுந்தான். தன் ஆயுதங்கள் அனைத்தையும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தனது சிறந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். நடக்கவிருக்கும் நிகழ்வுகளைச் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான். 

இரவு தன்னிடம் வரும் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. ஜீவராசிகளின் எல்லாத் துன்பங்களையும் மறக்கடிக்கிறது. இரவுத்தாயின் மடியில் அனைத்து உயிர்களும் துயில் கொள்கின்றன. ஆனால்...... துரோகத்தின் தகிப்பை, துக்கத்தை, உணர்ந்தவர்கள் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்களின் இமைகள் மூடுவதில்லை.துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள், இரவை விழுங்கிச் ஜீரணித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் சப்தமாகி, தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது. "துரோகத் துக்கமே" அவர்களின் தியானப்பொருளாகி விடுகிறது.அஸ்வத்தாமன் அந்த இரவில் உறங்கவில்லை. பாண்டவர்களின் பாசறையில் புகுந்தான். எதிர்பட்டவர், உறங்கியவர் என வேறுபாடற்று அனைவரையும் வெட்டி வீழ்த்தினான். உறங்குபவர்களைக் கொல்வது வீரனுக்கு அழகல்ல என்றபோதும் "துரோகத்துக்கம்" அவனை பைத்தியமாக்கி இருந்தது. பாண்டவப் பாசறை எங்கும் மரண ஓலம். பழிவாங்கும் படலத்தின் மகிழ்ச்சியை அஸ்வத்தாமன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு மரண அழுகுரலின் போதும் அவன் மனம் புதிய உத்வேகத்துடன் கூதுகலித்தது. புலன்கலனைத்தும் மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.அன்றைய பகலில் நடந்ததைவிட, அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக, கொடூரமாக இருந்தது.


'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் பாண்டவ சத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ".......அஸ்வத்தாமனின் கூர்வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். அவற்றை பரவசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா, காற்றை விட வேகமாக விரைந்தான்.


" பழிமுடித்தேன் துரியோதனா.இதோ நம் எதிரிகளின் உடலற்றத் தலைகளைப் பார்! குருஷேத்திர யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! போரின் முடிவில் ஜெயித்துவிட்டோம் துரியோதனா! கண்களைத் திறந்து! விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தப் பஞ்ச சிரசுகளை!"

"பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தியானமாகவே அதை மேற்கொள்கின்றனர். அவர்களின் ஐம்புலன்களும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் கவனம் நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஏமாற்றமும், துரோகமும் அவர்களை மேலும் உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் பிரளய கால பெருவெள்ளமாய் ஆர்ப்பரிக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் இருப்பவர்களை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது.


மிகுந்த ஆவலுடன் கண் திறந்த துரியோதனின் அடி வயிற்றிலிருந்து கிளம்பிய ஆத்திரக்குரல் அஸ்வத்தாமனின் பிடரி பிடித்து உலுக்கியது.


"அறிவு கெட்டவனே! ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டாயே! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை உறுதி படுத்தி விட்டாயே! ""என்ன நடந்தது துரியோதனா?"


"அட மடையா! வெட்டப்பட்ட இந்த தலைகளிலுள்ள முகங்களைப்பார்! இன்னுமா, உனக்குப் புரியவில்லை! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று, அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயடா அஸ்வத்தாமா. பஞ்சபாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய உனது வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதி ஆசையை நிராசையாக்கிவிட்டாயே !"


மூடிய துரியோதனின் இமைக்கதவு அதன்பின் திறக்கவே இல்லை.


அஸ்வத்தாமன் அதிர்ந்து போனான்.'பாண்டவர்களுக்குப்பதில், இளம் பிள்ளைகளையா கொன்றேன்? பாண்டவப் பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' எனதருமைத் துரோணத்தந்தையை துரோகத்தால் கொன்றவர்களை நான் இனி பழிவாங்க முடியாதா? கதறியழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கபடக்கண்ணன்."! 

யுத்தம் முடிந்த பின்னும். இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய் அஸ்வத்தாமா, நீ பிராமணன்...யோகி, கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி!" 

கை கூப்பினான் அஸ்வத்தாமன் ", அஸ்வத்தாமா என்கிற யானையைக் கொன்று, நான் இறந்து விட்டதாகப் பொய்யுரைத்து,துரோணராகிய என் தந்தைப் பாசத்தால் பரிதவித்து நின்றபோது, கொன்று விட்டார்களே பாண்டவப்பேடிகள். இந்தத் துரோகத்துக்குப் பழிவாங்க வேண்டாமா கணணா? என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் முழுவதிலும் பாண்டவர்கள் துரோகத்தால் மட்டுமே ஜெயித்திருக்கிறார்கள். திருநங்கையான சிகண்டியை முன்னிறுத்தி, பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் நடத்துதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் நண்பனை,துரியோதனனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதப் போரெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கண்ணா! நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கண்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்.....

சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் "துரோகத் துக்கம்" ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் உறங்குவதில்லை. அவர்களுடைய கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது அழுகுரல்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலில் நான் கலந்திருப்பேன் கண்ணா! துரோகிகளின் காதுகளில் அந்த ஒலி காலாகாலத்துக்கும் கேட்டுக்கொண்டே இருக்கட்டும். துரோகிகளின் நெஞ்சம் எப்போதுமே "துரோகம் செய்து விட்டோமே" என வருத்தப் பட்டுக்கொண்டே இருக்கட்டும்."


அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். இன்றும் அவன் சிரஞ்சீவியாய் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தால் யாரெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றனரோ, அவர்களில் அஸ்வத்தாமா வாழ்ந்து வருகிறான் . அஸ்வத்தாமாவை யாராலும் அழிக்கவும் முடியாது.

Monday, October 17, 2011

சி(பு)த்த குரு போதிதர்மன்yesterday in t.v ,i saw about speciality of "bodhi dharmar"in 7aam arivu.I read about him in wikipedia..please write about him master ,eager to read in your words.----abarnavijay.

கிருஷ்ணன் தாத்தாவிடம்,களரியும், சிலம்பமும் கற்றுக்கொண்ட நாட்களில் மராட்டிதுல்கானா, பனையேறிமல்லு,  ஐயங்கார்வரிசை,குறவஞ்சி போன்ற சிறந்த தற்காப்பு முறைகளோடு பரதேசி விளையாட்டு என்றும், "அப்பி" என்றும் ஒரு வகையான தற்காப்பு முறை எனக்குக் கற்றுத் தரப்பட்டது. ஆறடி நீளத்தில் கம்பை வைத்துக்கொண்டிருக்கும் எதிரியிடம் விவேகமான முறையில் நெருங்கிச்சென்று அவரை அசைய விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வதே  இந்த வீரமான, விவேகமானத் தற்காப்பு முறையின் விசேஷம்.    
பின்னாட்களில் மணி மாஸ்டரிடம் சாவலின்குங்க்பூ பயின்றபோது ,"டிரங்கன் மங்'  என்னும் தற்காப்புமுறை நான் முன்பே பயின்ற "அப்பியின்" மறு வடிவம் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. .............  
அதுமட்டுமில்லை நண்பர்களே!  இப்போது சாவலின்குங்க்பூவில் "பூமராங்" என்றொரு ஆயுதம் இருக்கிறதே,  இது வளரி எனும் பெயரில் அகஸ்தியரால் முன்பே பயன்படுத்தப்பட்டது. உலகத் தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நமது சித்தர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆன்மீக ரகசியங்களை உணர்ந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்தது சிலம்பம் எனும் தற்காப்புப் பயிற்சியே என்பதை அகஸ்தியர் தனது"கம்பு சூத்திரத்தில்" தெளிவு படக் கூறுகிறார். மேலும் எதிரியின் "கால்" வரிசையை வைத்து அவருடைய சுவாசம் இடகலையிலா? பிங்கலையிலாஎன்பதை கவனித்து அந்த நிலையில் அவரைத் தாக்க வேண்டுமா? அல்லது அவரின் தாக்குதலைத் தடுக்க வேண்டுமா? என்பதையெல்லாம் தனது "கம்பு சூத்திரத்தில்" தெளிவுபடக்கூறுகிறார் அகஸ்தியர். 


இன்று உலக ராணுவப்பயிற்சிகளிலெல்லாம் "லெப்ட்,ரைட்" என்று கூறுகிறார்களே இதற்கு முன்னோடி நமது அகத்தியர் என்றால் அது மிகையாகாது.  martial arts என்று சொல்லக்கூடிய எல்லாத் தற்காப்புப் பயிற்சிகளிலும் இடது காலை முன் வைத்தே பயிற்சி தொடங்கப்படுகிறது.  வலது சுவாசத்தைச் செயல்படச் செய்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். சாவலின்குங்க்பூவிற்கும், சிலம்பத்திற்கும், வர்மத்திற்கும், யோகாசனத்திற்கும்,  ஆடல் கலையான பரதத்திற்கும் அடிப்படை ஒன்றுதான்.   
குங்க்பூவிலும் முத்திரை உண்டு, வர்மத்திலும் முத்திரை உண்டு, யோகத்திலும் முத்திரை உண்டு, பரதத்திலும் முத்திரை உண்டு, குங்க்பூவில் ஆரம்ப நிலையில் செய்யக்கூடிய "sengoose stance" என்னும் நிலையே யோகத்தில் வீரபத்ராசனம்.    பரதத்தில் ஊர்த்துவ தாண்டவமாக செய்யக்கூடிய ஒரு நிலை குங்க்பூவில் elephant stance. இந்த நிலையே யோகத்தில் ஏகபாத ஊர்த்துவாசனம். பரதத்தை மித வேகமாக செய்தால் குங்க்பூ. அதையே மிக வேகமாக செய்தால் அது களறி,    குங்க்பூவை மென்மையாக செய்தால் அது பரதம். 
                  
அது சரி,  இதுக்கும் போதி தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கத் தோன்றுகிறதா?....... சாவலின் கோவிலை நிர்மாணித்து குங்க்பூவை அறிமுகப்படுத்தியது போதிதர்மன் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் போதி தர்மன் குங்க்பூவின் தாய் பயிற்சியான களரியைப் பயின்றது பொதிகை மலையில் என்பது மறைக்கப்பட்ட வரலாறு. போதி தர்மன் புத்தபிக்கு என்றபோதும் அகத்தியரின் நேரடி சீடர் என்பதும் மறைக்கப்பட்ட செய்தி.


பல்லவ சாம்ராஜ்யத்தில் வைஷ்ணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் புத்தப்பிக்குவாக அறிமுகம் செய்யப்பட்டப் பல்லவ இளவரசனைக் கொன்றுவிட வைஷ்ணவர்கள் முயற்சி செய்கிறார்கள்.  போகமஹரிஷியின் உதவியுடன் புத்தப்பிக்குவான இளவரசன் பொதிகைமலைக்கு அழைத்துவரப்பட்டு அகஸ்தியருக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான். "இறையில்லை ஆனால் இறைத்தன்மை உண்டு அதனை விழிப்புணர்வால் மட்டுமே அடையமுடியும்" எனக்கூறுகின்ற  புத்தமும், "நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" எனக்கூறுகின்ற சித்தமும், கைகோர்த்ததில் ஒரு புது சந்நியாசி உருவானார்.  அவரே அக்கால தமிழ்நாடு, கேரள எல்லைப்பகுதியில் உள்ள மக்களால் “லாட சன்யாசி” எனும் திருப்பெயரால் அழைக்கப்பட்ட போதிதர்மன்.  


குதிரையின் லாடத்தைத் தனது மரச் செருப்பின் அடியில் பதித்திருந்த இந்த லாட சன்யாசியால் இப்போதைய தென்காசி, செங்கோட்டை, நாகர்கோவில் பகுதியில் வாழும் மனிதர்களின் மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதே “அப்பியும்”, "விலங்குவர்மமும்".  இன்றும் இந்தப்பகுதியிலேயே  வர்மத்தில் சிறந்த வர்மானிகள் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. லாட சன்யாசியின் நினைவாக  இன்றும் இந்தப்பகுதியில் சன்யாசி எனும் பெயருடன்  பலர் வாழ்ந்து வருகிறார்கள். அகத்தியரிடம் வித்தை கற்பதற்காகப் போதிதர்மன் குற்றாலமலையில் தங்கியிருந்த குகை “பரதேசிப்புடவு” என்னும் பெயரில் இன்றும் உள்ளது. குற்றாலத்தில் உள்ளவர்களுக்கேக் கூடத் தெரியாத இந்தக் குகைக்கு சீனப் புத்தப் பிக்குகள் வந்து செல்வது ஆச்சரியமான அதிசயம்.

அகத்தியரிடம் தான் கற்றுக்கொண்ட யோகபாடத்தையும், களரியையும் இணைத்து ஷாவலின் குங்க்பூவை வடிவமைத்தப் பெருமை போதிதருமனையே சாரும். பொதிகைமலையில் தங்கியிருந்த போதிதருமன் விலங்குகள் சண்டையிடும் காட்சியைப் பார்க்கிறார். உருவத்தில் பெரிய யானை, உருவத்தில் சிறிய சிறுத்தையிடம் தோற்றுப்போவதின் சூட்சுமம் புரிகிறது. ஒவ்வொரு விலங்கும் தனக்குள் இருக்கும் விஷேச சுவாசத்தைச் சப்தமாக,சக்தியாக மாற்றிக்கொள்வதின் ரகசியத்தைத் தனதுக் கூர்ந்த ஞானத்தால் உணர்ந்த போதிதர்மன், தான் கற்ற களரியில் விலங்குகளின் நிலைகளை(stance) இணைத்துக் கொள்கிறார். Monkey stance, elephant stance, tiger stance, snake stance, cat stance போன்ற பயிற்சி முறைகளே இன்றும் குங்க்பூவை மற்ற கராத்தே பயிற்சி முறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. “சிட்டோரியன்,” “ஹயசிக்கா”  போன்ற கராத்தே பயிற்சி முறைகளையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் அவற்றிலெல்லாம் animal stance கிடையாது என்பதே நான் உணர்ந்த உண்மை.  

ஒவ்வொரு விலங்குகளின் நிலையில் நிற்கும் போதும் மனிதனுக்குளிருக்கும் “தச வாயுக்கள்” இயக்கப்படுகிறது” . இந்த விஷேச நிலையினால் சுவாசம் கட்டுப் படுகிறது. “சலே வாதம், சலே சித்தம் நிச்சலம் நிச்சல பவதி” என்னும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கூறியபடி சுவாசக் கட்டுப்பாடு மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன ஒடுக்கம் மனிதனின் ஞானப்பாதைக்கு வழி வகுக்கிறது. யோகத்தில் மேம்பட்ட சுவாசப் பயிற்சியாகக் கூறப்படும் “பதினெட்டுக் கதிகளையும்”  தனது தற்காப்புப் பயிற்சியில் போதிதர்மன் பயன்படுத்தி இருக்கிறார்.  யோகத்தில்,  ஒரு குரு தனது நெருக்கமான, மேம்பட்ட சீடனுக்குக் கற்றுக்கொடுக்கும் உச்சக்கட்டப் பயிற்சியான “முத்திரைப் பயிற்சியையும்” குங்க்பூவில் இணைத்த பெருமை போதி தருமனையே சாரும்.
   
     ஒருமுறை ஐந்தலைப்பொதிகையில் போதிதர்மன் இருந்தபோது, மூங்கில் மரத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுப் பனியின் எடை தாங்காமல் மூங்கில் மரம் வளைகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் பனியின் எடை முழுவதையும் இறக்கிவிட்டு மூங்கில் மரம் நிமிர்கிறது. கூர்ந்த மதியுடைய போதிதர்மனுக்கு இந்த நிகழ்வு ஒருப் புது யுக்தியைப் போதிக்கிறது.  நினைத்த மாத்திரத்தில் உடலின் எடையைக் குறைக்க முடியுமா? என அகத்தியரை வினவுகிறான். நமது உடலில் தசவாயுக்களில் ஒன்றான “உதானனைச்” செயல்படச் செய்தால் மனித உடலின் எடையைக் காற்றை விடக் கனம் குறைந்ததாக மாற்றிக் கொள்ளமுடியும்.எனும் அறிவியல் போதிக்கப்படுவதோடு உதானனைச் செல்படுத்த யோக பாடத்தில் ஒன்றான “உட்டியானா பந்தமும்” கற்றுக் கொடுக்கப்படுகிறது. 


இன்றும் சீன தேசத்தில் மூங்கில் மரத்தில் நின்று கொண்டே பறந்து பறந்து பயிற்சி செய்யும் “உட்டான்” பயிற்சி முறை மிகவும் பிரபலம். சிலம்பத்திலும் ஒரு வீட்டிலிருந்து,இன்னொரு வீட்டிற்குப் பரந்த நிலையில் தாவிச் செல்லும் நிலைக்கு “உடான்” எனும் பெயரே வழக்கத்தில் உள்ளது. கொக்கும், நாகமும் சண்டையிடுவதைப் போதிதர்மன் பார்த்ததின் விளைவே இன்று உலகம் போற்றும் யோக ஆடல் கலையான “தாய்ச்சி” தோன்றியதின் ரகசியம்.


இவ்வளவு பெருமை வாய்ந்த போதி தர்மன் ஏன் சீனாவுக்குச் சென்றார் என நீங்கள் வினா எழுப்புவது எனக்குப் புரிகிறது.


அக்காலத்தில் சீன தேசத்தில் “இறைவன் இல்லை, ஆனால் இறைத்தன்மை உண்டு, ஒவ்வொருவரும் தனது விழிப்புணர்வின் மூலமாக மட்டுமே இறைத்தன்மையை உணர முடியும்” எனும் புத்தரின் போதனைகள் இறைவனை வெளியில் தேடிக்கொண்டிருந்தவர்களிடையே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மதகுருமார்களும், பேரரசர்களும் வெகுண்டெழுந்தார்கள். புத்த பிக்குகள் சித்திரவதைக்கு உட்பட்டதோடு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அதிகமான நியமங்களைக் கடை பிடித்த பிக்குகள் உடல் நிலையிலும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்கள். இந்தப்பிக்குகளால் எதிரியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இந்தப் பிக்குகளுக்கு எதிரியின் தாக்குதலைச் சமாளித்துக்கொள்ள தற்காப்புப் பயிற்சியுடன் கூடிய உடல் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் பயிற்சி முறைத் தேவைப்பட்டது. ..............காலம் கனிந்தது., சிறப்பு பயிற்சி பெற்ற போதிதர்மன் என்னும் திராவிடப்பிக்கு  சித்த குருமார்களின் ஆசியோடு சீன தேசம் நோக்கிப் பயணப்பட்டார். 

இன்று யோகயுவகேந்திராவின் லோகோவாக வைத்திருக்கிறோமே “யின்-யாங்”, இதுதான் அன்றைய போதிதர்மனின் கொடிச்சின்னம். இந்த யின்-யாங்கை சீனர்கள் இன்று தங்களுடையது எனக்கூறினாலும், இது நமது சித்தகுருமார்களால் வடிவமைக்கப்பட்டது என்பதே உண்மை. வலது சுவாசமான யின் னையும், இடது சுவாசமான யாங் கையும் இணைக்கத் தெரிந்தால் ஒரு மகத்தான சூட்சும, சுழுமுனைச் சக்தியைப் பெறமுடியும் என்பதே யின்-யாங் சொல்லும் தத்துவம். இன்றும் சித்தகுருமார்கள் இருக்கிற ஊர்களிலுள்ள கோவில்களில் யின்-யாங் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.  குறிப்பாகத் திருவண்ணாமலைக் கோவிலில் இந்தச் சின்னம் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.பின்னாட்களில் நான் “அக்குபஞ்சர்” பயின்றபோது, இந்த குத்தூசி வைத்தியத்திலும் போதிதர்மன் சிறந்த ஞானத்துடன் இருந்ததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஷாவலின் கோவிலுள்ள புத்தப்பிக்குகளுக்கு போதி தருமன் "குத்தூசி வைத்தியம்" செய்ததாக அக்குபஞ்சரின் மூலப் புத்தகமான "நெய்ஜிங்கில்" குறிப்புகள் காணப்படுகிறது.


போதிதர்மன் நோக்கு வர்மத்திலும் தலை சிறந்து விளங்கியிருக்கிறார். 
யோக சத் கிரியாக்களில் ஒன்றான "திராடகப்" பயிற்சியின் உச்சக்கட்ட நிலையே வர்மத்தில் "நோக்கு வர்மமாகப்" பேசப்படுகிறது. பிராணயாமப் பயிற்சியின் மூலமாகப் பிராண சக்தியைத் தனக்குள் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற ஒரு மேம்பட்ட யோகிக்கு மட்டுமே நோக்கு வர்மம் சித்தியாகும் என்பது யோக ரகசியம்.


வெளியில் போராடும் குணம் உள்ள ஒரு ரஜோ குண வாதியே பின்னாளில் மனதுடன் போராடத் தகுதியுள்ள  சத்துவ குண யோகியாக மாற முடியும் என்பதே போதிதர்மன் கண்ட உண்மை.  குற்றாலமலையிலுள்ளப் “பரதேசிப்புடவில்” லாடசன்யாசி இன்றும் வந்துபோகிறார்.   அவருடைய லாடம் பதித்த மரச் செருப்பின் தடம்தான் இதுவென எனது களறி குருமார்கள் காட்டியக் காலடித் தடங்களை இன்றும் என்னால் நினைவு கூற முடிகிறது.  இன்று எனது களறி, மற்றும் வர்ம குருமார்கள் என்னுடன் இல்லை. கிருஷ்ணன் தாத்தாவையும், பாஸ்கர நாயரையும், காலம் என்னிடமிருந்து பிரித்துவிட்டது. ஆனால் “பரதேசிப் புடவில்” வைத்து அவர்கள் கற்றுத்தந்த “சித்த வித்தை” என் அடி மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாக சமாதியடைந்த "சண்முகச்சாமி" எனும் சித்த வித்யார்த்தி இந்த பரதேசிப்புடவில் நீண்ட காலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாத அறிவுடன் சீனம் சென்று,            ஏழாம் அறிவையும் தாண்டி,
எட்ட முடியாப் புகழுடன் விளங்கும்  போதிதருமன் எனும் திராவிடப் பிக்குவின் யோகப்பணி நினைந்து பெருமை கொள்கிறது யோகயுவகேந்திரா