Total Pageviews

Monday, August 22, 2011

கோகுலாஷ்டமி......யோகப்பார்வை



"
வாழ்க்கையேத் திருவிழா! அதை ஆனந்தமாக அனுபவியுங்கள்" என்றார் பகவான் ரஜனீஷ். பல சமயங்களில் வாழ்க்கை போரடித்தாலும் சில தருணங்களில் "எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" எனப் பாரதி பாணியில் வாழ்க்கையைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. சுற்றுகின்ற வாழ்க்கைக் சக்கரத்தில் சுழன்று சதா சலித்துக்கொண்டிருக்கிற மனிதனுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்தோடு உண்டாக்கப்பட்டவையேத் திருவிழாக்கள். அந்த திருவிழாக்களில் ஒரு முக்கியமான திருவிழா, கோகுலாஸ்டமி. 



துக்கப்பட்ட மனத்தை உழுது பண்படுத்தி "கிருஷி" செய்யப்படுவதற்காக அவதரித்த அவதாரமே " ஸ்ரீகிருஷ்ணன்".
யோக கலாசாரத்தில் உச்சக்கட்ட சந்தோசத்தோடு கூடிய மனமே "கிருஷ்ணன்" எனக் கூறப்படுவதுண்டு. அந்த உச்சக்கட்ட சந்தோசத்துடன் கூடிய மனத்தைக் கண்டு கொண்டவர்களால் கொண்டாடப்படக்கூடிய திருநாளே கோகுலாஷ்டமி எனும் கண்ணன் பிறந்த நாள் விழா. நமது யோக யுவகேந்திராவிலும் ராஜபாளையத்தில் வைத்து கோகுலாஷ்டமிக் கொண்டாடினார்கள். ராஜபாளையத்தில் "விழா" என்றால் சொல்லவா வேண்டும்! வழக்கம் போல சமாய்ச்சிட்டாங்க! செண்டருக்குள் போவதற்கு முன்னால் வழியிலேயே ஒரு குட்டி கிருஷ்னர் சாலையில் நடந்து கொண்டிருந்தார். நெருங்கிப்பார்த்தால்........ அட! ..........இது நம்ம "தனுஷா" இல்ல! 


கிருஷ்ண வேடம் கண கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. 




செண்டருக்குள் நுழைந்தவுடன் முதலில் கண்ணில் பட்டது மேடை அலங்காரம்.  இத்தனை கிருஷ்ணனையும் எங்கப்பா தேடிப்பிடீத்தீர்கள்! ................ராஜபாளையம் யோகயுவகேந்திரா சகோதரிகளுக்கு சபாஷ் போடலாம் போல இருந்தது. மனம் எனும் கிருஷ்ணனுக்கு எத்தனை அவதாரங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்வதாகப் பட்டது எனக்கு. 



நடக்கும் நிகழ்வுகளைச் சாட்சியாக நின்று கவனிக்கத் துவங்கினேன். "அதுரம் மதுரம்" மனதிற்கு இதமாய் இருந்தது. நிகழ்ச்சியின் இடையில் கிருஷ்ணனைத் தேடுவதாக ஒரு பாடல். சூட்சுமமாய் நம்முள் மறைந்திருக்கும் கிருஷ்ணனைத் தேடுவதற்காகத்தான் கோகுலாஷ்டமி என்பதை எனக்குள் ஞாபகப் படுத்துவதாக இருந்தது. மாயக் கண்ணனானக் கிருஷ்ணனனை நம்முள் தேடிக் கண்டுபிடிக்கச் சில யுக்திகளை நாமும் தந்திரமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அத்தகைய யுக்திகள்தான் நாமசங்கீர்த்தனமும், கும்மியாட்ட, கோலாட்டமும். 





கோலாட்டம் நடைபெற்றபோது சாட்சியாக இருந்த என்னுள் ஏதோ ஒரு பொறிதட்டியது. நமது முன்னோர்கள் எவ்வளவு பெரிய ஆன்மீகச் சூட்சுமத்தை விளையாட்டாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி வியக்க முடிந்தது


நாம் கோயிலுக்கு போகும்போதேல்லாம் அர்ச்சகர் சாமிக்கு தீபாராதணைக் காட்டும் முறையை உன்னிப்பாக கவனித்து இருக்கிறோம் அல்லவா? சிலாரூபத்தின் திருமுடி துவங்கி.....திருவடி வரை - ஒரு பாம்பு வளைந்திருப்பது போன்ற பாவனையில் நமக்கு தீபாதரணைக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? அந்த சிலாரூபத்தில் பிராணன் பாம்பு வடிவத்தில் இருக்கிறது என்பதை அடையாளம் காட்டி - கற்பூர ஆரதியை கீழிருந்து மேல் உயர்த்தி எடுத்துச் சென்று மூர்த்தியின் முகத்தைக் காட்டுவார் அர்ச்சகர். பிராணசக்தியைப் பற்றிய அறிவியலும் அதன் முக்கியத்துவமும் ,  சூட்சுமமும்,   மதப்பார்வையில் பார்க்கப்படுகிற காரணத்தால் அதன் இன்றியமையாதத் தன்மையையும் நம்மால் உணரமுடியாமல் போய்விட்டது.



சிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளப் பிராணசக்தியை - யோகஅறிவியலின் துணையுடன் - உளவியல் ரீதியான பார்வையில் பார்ப்போமேயானால் "தனிமனிதனுக்குள்ளும் இந்தப் பிராணசக்தி வளைந்து வளைந்து தான் எழுச்சி கொள்ள வேண்டும் -என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 



யோகவாழ்வு மூன்று முக்கியமான பரிமாணங்களைத்தான் சார்ந்துள்ளது. நாம் ஒவ்வொருவரும் நமது குருவுடன் சேர்ந்து அவரது வழிகாட்டலின் உதவியுடன் நமது பிராணசக்தியை எழுச்சி பெற செய்வது  - பின்பு நமது தனிப்பட்ட முயற்சியினால் நம் தனி மனிதப் பிராண எழுச்சிக்கு முயற்சி செய்வது  - அதன் பின் நம் சமூக பங்களிப்பை உனர்ந்து பெறப்பட்ட பிராணசக்தியை பகிர்ந்தளிப்பது. இந்த சூட்சுமமான உண்மையை நாம் உணர்ந்துகொள்வதற்காகவே முன்னோர்கள் இத்தத்துவங்களை கோலாட்டம் , கும்மியாட்டம் எனும் விளையாட்டிற்குள் பதுக்கி வைத்தார்கள்.



அரசமரத்தடியில் இருக்கும் கால நாகம் நம் ஆறு ஆதார சக்கரங்களை குறிக்கும் அடையாளம் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கு அது வணங்கி ஏற்றம் பெறுவதற்கு,  இங்கு கோலாட்டமும், கும்மி ஆட்டமும் உணர்ந்து, விளையாடி ஏற்றம் பெறுவதற்கு.


கும்மியாட்டத்தில் வெறும் கைகளைத் தட்டி ஓசையெழுப்புவதையும், குனிந்து நிமிர்ந்து விளையாடுவதையும், கூட்டமாக, குழுவாக ஆண், பெண் என ஆடுவதையும் மட்டும்தான் மிக சாதாரணப் பார்வையில் பார்த்திருக்கிறோம்.


இப்போது யோகமுறையில் இந்த விளையாட்டை அணுகிப் பாருங்கள் அதில் பொதிந்த ஞானம் புலப்படும்.



கும்மியாட்டத்தில், கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை குனிந்து - அங்கிருந்து எழுப்பி - ஒவ்வொரு ஆதாரமாக உயர்த்தி -இறுதியில் தலை உச்சிக்குக்கொண்டுபோய் தட்டி முடிப்பது ஒரு சுற்று.- அதன் பின் அப்படி தட்டி முடித்த நிலையில் - அப்படி எழுச்சியின் நிலைக்குப் போன ஒவ்வொருவரும் தமக்குள் அதாவாது தம் எழுச்சியை பிறரின் கைகளைத்தட்டி பங்கிட்டுக்கொள்வதான ஒரு சுற்று - கீழ் நிலையிலிருந்து மேலுக்கு உயரும்போதே அடுத்தவரோடு இணைந்து, பகிர்ந்து ஒத்திசைவகளோடு கூட்டமாய் மூன்னேறும் வகையிலான ஒரு சுற்று.  - குருவோடு, குழுவாகக் கற்றல்- தனியாகக் கற்றல்-கற்றதை பகிர்தல் - என்கிற யோகப்பார்வை எவ்வளவு சூட்சுமமாய் இருக்கிறது பார்த்தீர்களா..?

இதையே இன்னும் கொஞ்சம் விளக்கி சொல்வதனால் தனிமனித சக்தியை உயர்த்தியதன் விளைவை - குருவோடு,குழுவாக பெறுதல் - தனியாகப் பெறுதல், ஒவ்வொருவரோடும் பகிர்தல் .

கும்மியாட்டத்தில் மனிதனின் இட- பிங்கலை நாடிகள் பெருக்கல் குறியாய் அடையாளம் காட்டப்பட - கைகள் தட்டி ஓசை எழுப்பப்படுகிறது. கோலாட்டத்தில் வெறும் கைகளுக்குப் பதிலாக இரண்டு குச்சிகள் - நம் பிராணசக்தி பெருக்கல் குறி வடிவத்தில் இயங்குவதை அடையாளமாகக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.




மனித வாழ்வில் ,உளவியலும்,யோகஅறிவியலும் பிரிக்க முடியாத அம்சங்கள்.  நமது யோகயுவகேந்திராவின்  நோக்கம் மனிதம் எழுச்சிப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஆன்மிகயோகம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, உளவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, மதம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி. இம்மூன்று பாதைகளையும்   இணைத்துத்தான் நம் முன்னோர்கள் கோகுலாஷ்டமி, கும்மியாட்டதையும் கோலாட்டத்தையும் தந்துவிட்டு போயிருக்கிறார்கள்.அடுத்த யோகயுவகேந்திரத் திருவிழாவில் கோலாட்டதையும், கும்மியாட்டத்தையும் புதுப்புது யோக உத்திகளுடன் புரிந்துகொண்டு விளையாடுவோம்......!


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (
கம்பர்)









No comments:

Post a Comment