Total Pageviews

Saturday, June 4, 2011

முடிந்தால் நீங்களும் தேடுங்கள்!



நான் யார்?
கற்பனையின் நிழலா?நிழலின் கற்பனையா?
கனவுகளின் நிஜமா?நிஜமான கனவா?நான் யார்?
தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனா?;
விழித்துக் கொண்டிருக்கும் ஒருவனா?
 இந்த உலகம்இதன் வாழ்க்கை....
என்பதெல்லாம்,கனவுகளாநனவுகளா?
கனவுகள் என்றால்,
கனவுகளில்விழித்துக் கொண்டிருக்கும்
நான் யார்?
நனவுகள் என்றால்
நனவுகளில் கனவு கண்டு கொண்டிருக்கும் 
நான் யார்?
 நீண்ட பெரும் கனவின்
ஓர் அங்கம்தான் எனது விழிப்பா?
அந்த விழிப்பின்
அத்தியாயங்கள்
இரவும் பகலுமா?
இதில் 
நான் தூங்கி எழுந்தேனா? 
எழுந்தபின் தூங்குகிறேனா?
கனவுகள் மூலம் 
இந்த உலகத்தைக் காண்கிறேனா?
இந்த உலகத்தின் மூலம் 
கனவுகள் காண்கிறேனா?
நான் தூங்கினால்-
என்னோடு
இந்த உலகமும் தூங்கி விடுகிறது;


நான் எழுந்தால்-
என்னோடு 
இந்த உலகமும் எழுகிறது! 
இதோ:
என் முன்-
ஜீவராசிகள் எனும் பிம்பங்கள்.....
அவற்றின் இடையே-
நிறபேதங்கள்இனபேதங்கள்;
அசைவன;அசையாதிருப்பன;
தெரிவன;தெரியாதிருப்பன…….
இவை எல்லாம்
எதனுடைய அங்கங்கள்?
என்னுள்ளிருந்தே
இவையனைத்தும் தோன்றுகின்றன!
எனது விழிகளால்
பார்க்கிறேன்;
எனது செவிகளால் 
கேட்கிறேன்!
நானே தேடுகிறேன்;
நானே உண்கிறேன்!
அழுவதும் சிரிப்பதும்
ஆனந்திப்பதும் துயர்ப்படுவதும்
எண்ணுவதும் எண்ணாதிருப்பதும்
எல்லாம் நானே….

நான்’ எங்கிருந்து வந்தேன்?’
என்பது 
எனக்குத் தெரியாது…….

தாயின் கருவறை
என்று சொன்னால்….
அந்தத் தாயின் கருவறை 
எங்கிருந்து வந்தது?
கண்ணுக்குத் தெரிந்திராத
காற்றை
ரப்பர் பை ஒன்றில்
ஊதி அடைத்ததைப் போல்
உருவமாய் வந்த
நான்’ எனும் மூலம் எது?
 நான்
என்பதன் நோக்கம் என்ன?
 நான்’ விரும்பியே
வந்த-
இந்த வாழ்க்கை…..


இப்போது-
ஏன்
என்னை விலகுகிறது?
அல்லது விலக்குகிறது?
என்னைச் சுற்றியே
இந்த உலகம் இயங்குகிறது
நான்……
அந்த இயக்கத்தின் அச்சு:
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
அதன் அச்சு முறிந்தபின்னும்
சுழற்சி நிற்பதில்லை……
ஆரம்பம் எது?
என்பது தெரியாமல்
முடிவும் அறிவிக்கப்படாமல்
முடிந்து விடுகிற
எனது இயக்கத்தில்
கதா பாத்திரமாகிற
நான்’ யார்?
ஒரு நாள்-
இந்த உலகத்தை நானும்
இந்த உலகம் என்னையும்
கை விட்டு விடுவதற்காக….
இன்று-
இந்த உலகமும் நானும்
கை கோர்த்துக் கொண்டு
கையொப்பம் இடுகிற 
காட்சி அரங்கேறுகிறது!
இந்த அரங்கேற்றத்தின்
கதா நாயகனான 
நான்’ யார்?

ஆம்!
புறப்பட்ட இடம்
புரியாமல் புறப்பட்டுக் கொண்டும்......

போகும் இடம் 
தெரிந்தும்
சென்றடையாமலும்



பிறருக்கு- 
வழி காட்டிக் கொண்டே
பயணித்துக் கொண்டிருக்கும்
வழிகாட்டி;

குழப்பங்களை
ஒழிப்பதற்காகவே,
குழம்பிக் கொண்டிருக்கின்ற
கொள்கைவாதி;
ஓய்வு பெறுவதற்காக,
ஓய்வின்றி
உழைத்துக் கொண்டிருக்கின்ற 
உழைப்பாளி;
குனிந்திருந்தவர்களை 
நிமிரச் செய்து
தலை குனிந்து போன
உபதேசி;
அரண்மனை இல்லாத அரசன்; 
பாமரமாய்-
பட்டொளி வீசிக்கொண்டிருக்கும் பாமரம்”;
நிரந்தரமற்ற நிறந்தரம்;
பேசத் தெரிந்த ஊமை;
விலாசமுள்ள அநாதை;
பொய்யான மெய்யன்;
புழுங்கிக் கொண்டிருக்கின்ற விசிறி;
இருந்தும்,
இல்லை’ என்று பொருளுரைக்கும்
அருஞ்சொல் பதம்;

இருட்டைக் கவசமாக்கி
எரிந்து கொண்டிருக்கும்
அகல் விளக்கு!
இரவின் விடியலுக்கும்;
விடியலின் முடிவுக்கும்
விளக்கம் தரும்
முற்றுப் புள்ளி.

No comments:

Post a Comment