Total Pageviews

Thursday, April 21, 2011

தொலைந்து போன நான்!






என்னை தொலைத்து விட்டு
என்னுள்ளேயே தேடுகிறேன்!

என்னை எனக்கு அடையாளம் காட்ட.
என்னைத் தெரிந்தவர்களே
நீங்களும் வாருங்கள்
காணாமல் போனவர்களை
அறிவிக்கும் போதெல்லாம்
முதலில் சொல்வது
பெயர்தானே 

இங்கே எனக்குப் பல பெயருண்டு

உடல், உள்ளம், ஆத்மா

நிறைய புனைப்பெயர்

என் நிஜப்பெயர் நானறியேன்!

புகைப்படம் தேடும்

பத்திரிக்கை நண்பரே,

என்னுள்ளிருக்கும்

என்னின் புகைப்படம்

உமது தேடுதல் வேட்டைக்கு

நிச்சயம் உதவும்.

ஆனால் 

வெளிப்பூச்சுப் பூசிப்பூசி

தேய்ந்தே போனதால்

உள்ளபடி உண்மை முகம்

பார்த்தவர் யாருமில்லை.

நானே பார்க்காதபோது

வேறார் பார்த்திருப்பார்?

கண்ணாடி கூட

கண்டிப்பாய் பார்த்ததில்லை

கண்ணாடி பார்த்ததெல்லாம்

நிழலின்றி நிஜமில்லை

என் உயரம், நிறம்

எனக்கும் உறுதியாய்த் தெரியாது.

வானம் வரை உயர்வதும்

சிலசமயம்

தரையிலேயே புரள்வதுமாய்

உள்ளதுயரம்,

என்னுடையது

நொடிக்கு நொடி

மாறுவதால்

தேடுதல் வேட்டைக்கு

எனது உயரம் உதவாது

நிறம்

பாலைப் போலவென்று

பாலூட்டியவள்

சொல்லிச் சென்றாள்.

கள்ளைப் போலவென்று

கல்லூரி நண்பர் சொல்வார்

கருமை நிறமென்று -என்னைக்

காசாக்கும் ஆசைகொண்ட

கயவர் பலர் சொல்வார்.

செம்மை நிறமென்று -

என்னை செதுக்கிய

அண்ணாமலை அண்ணல் சொல்வார்

பயணிக்கும் பாதைதனில்

காலத்தின் மாற்றத்தால்

பச்சோந்தி நிறமென்று

பார்ப்பவர்கள்

எழுதினாலும் எழுதக்கூடும்

குணத்தைப் பற்றி மட்டும்

குறுந்தகவல் எனக்குளுண்டு

அப்பாவி இல்லை நான்

பாசத்தால்

பலியாக்கப்பட்டு

பரம ஞானம்

பெற்றவன் நான்

ஒருவேளை

என்னைக் கண்டு பிடித்தால்!

என்னிடம்

என் சார்பில்

ஒரே ஒரு கேள்வி கேட்டு

பகிர்ந்திடுவீர் பதிலெனக்கு

எனக்குள் இருந்தும்

என்னையே பாராமல்

எனேக்கே தெரியாமல்

என்னுள் ஒழிந்தே

என்ன "நான்" சாதித்தேன்?




No comments:

Post a Comment