Total Pageviews

Tuesday, April 19, 2011

அண்ணாமலை பாட்டுசாமி



யோக யுவ கேந்திரா உறவினர்களுக்கு வணக்கம்!




அண்ணாமலைக் கிரிவலப் பாதையில் கடந்த நாற்பது ஆண்டு காலமாகப் பாட்டு சாமி என எல்லோராலும் புகழப்பட்ட மணி சாது கடந்துபோன பிரதோசத்தன்று ஜீவ ஒடுக்கமாகி இருக்கிறார். வாழ்க்கையின் பரிமாணங்களை உணர்ந்து கொண்ட ஒரு நல்ல சாது. 




இந்த மாய வாழ்க்கையின் நிதர்சனங்களை இந்த சாது பாடல்களாகப் படிக்கும்போது உள்ளம் நெகிழ்ந்திருக்கிறேன். அவர் பாடும்போது வாழ்கையின் நிலையாமையை உணர்ந்திருக்கிறேன். எத்தனையோ சினிமா இசையமைப்பாளர்கள் அழைத்தபோதும் அண்ணாமலையாரையும் ,அடியார்களையும் மட்டுமே இந்த வாய் பாடும். இந்த கட்டை இந்த மலையில் ஒடுங்கவே விரும்புகிறது என்று கூறி கிரிவலப் பாதையிலேயே வைராக்கியமாக ஒடுங்கியிருக்கிறார் இந்த சாது. 




பக்கவாதத்தில் அவதிப்பட்ட போது கூட என்னைப்பார்த்தால் கண்டிப்பாக ஒரு பாடலாவது பாடிய பின்பு தான் அனுப்பிவைப்பார். இவர் பாடும்போது நமது  சாமி தன்னை மறந்து ஆடுவதை நேரிடையாகப் பார்த்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் கிரிவலம் செல்வோர் இவர் பாடலை கேட்காமல் கிரிவலம் சென்றிருக்க முடியாது. 




பௌர்ணமியில் மட்டுமல்லாது எல்லா இரவுகளிலும் பாடல் பாடுவது இவரின் தனிச்சிறப்பு. ஆள் இல்லாத இரவுகளில் கிரிவலம் செல்லும்போது இவருடைய பாடல்கள் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நான் மண்ணானால் அண்ணாமலையின் மண்ணாவேன், மலரானால் நிருதிக் குளக்கரை மலராவேன்....... என இந்த சாதுவின் பாடல் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அவர் விரும்பியது போலவே இவருக்கு நிருதிக் குளக்கரையிலேயே சமாதி வாய்த்திருக்கிறது.


நித்தியமென்னு மலையில் நின்றுகொண்டோம் யாம்
நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்
சத்தியமாய் எங்கள் கடந்தான்அழியாதே 
சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே.   பாம்பாட்டிச்சித்தர் 

No comments:

Post a Comment