Total Pageviews

Tuesday, February 1, 2011

சிதம்பர ரகசியம்

நான் பலதடவைகள் சிதம்பரம் கோயிலுக்குப் போயிருக்கிறேன்
ஒவ்வொரு தடவையும் அந்த "சிதம்பர ரகசியம்" பார்த்திருக்கிறேன் ஆனாலும் இன்னும் அது எனக்கு ரகசியமாகவே இருக்கிறது.ஒரு கதவின் துளையினூடே நம்மைப் பார்க்கச் சொல்கிறார்கள் ஒரே இருட்டாக இருக்கிறது ஆனாலும் நடுநடுவே நட்சத்திரம் போல் ஏதோ பளிச்சென்று தெரிந்து மறைகிறது, அங்கிருக்கும் தீட்சதிரிடம் கேட்டேன் இதுதான் ஆகாயத் தத்துவம் என்றார் . அவர் இருக்கும் பிஸியில் பதில் கூறவில்லை. விளக்கம் கூறுங்களேன்.?.................அனு




பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற சிதம்பரத்தில், வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்,ஈசன் மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் .  மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் (இதை நான் சொல்லலீங்க, புராணங்கள் சொல்லுது)




இந்தச் சிதம்பர ரகசியம் என்பது புரிந்து கொள்ளக் கூடியவிஷயமில்லை உணர்ந்து கொள்ளவேண்டியது.......... 

நம் உடலில் வலது பக்கத்தில் கவிழ்த்து வைத்த தாமரைமலர் போல ஆன்மீக இதயம் இருக்கிறது. இதை ரமண பகவான் போன்ற ஞானிகளும் கூறியிருக்கிறார்கள் .இதயத்தின் நடுவில் உள்ள அனுவை விடச் சிறியதான மையப் புள்ளியே ஆத்மாவின் இருப்பிடம் என்று சொல்லுவார்கள். அந்த மையப் புள்ளி(சூன்யம்) இருக்குமிடத்தைக் கண்டறிந்து, நம் யோகசக்தியின் மூலம் உள்ளொளியைக் காணுவது யோகக் கலையின் "தஹர வித்யா" என்று அழைக்கப் படுகின்றது. மகரிஷி பதஞ்சலியும், வியாக்ர பாதரும்,இந்த தஹர வித்யா முறையின் மூலம் கண்டறிந்த இறை சக்தியை (ஆகாய பிராணா) சிதம்பரத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்..

ஆகாயம் என்பது வெற்றிடம். சூன்யம்.

" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .

இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த தங்க வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும். ;


நாம் எழுதும்போது,ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையிலுள்ள இடைவெளியை space என்று தானே கூறுகிறோம். ஆகாயத்தையும் space என்றுதான் கூறுகிறோம். ஆகாயத்தத்துவம் என்பது இடைவெளியைக் குறிக்கிறது.

நமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நமது உடலுக்குள்ளும் ஆகாயம்(இடைவெளி) இருக்கிறது. இந்த இடைவெளியைத்தான் சித்தர்கள் பரவெளி,வெட்டவெளி, என்கின்றனர்.இந்த உடலுக்குள் ஆகாயம்(இடைவெளி)எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் "சிதம்பர .ரகசியம்".


இந்தப் பிரபஞ்சத்தின் இதய பாகம் ஆன சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ள நடராஜர் சந்நதியில் நடராஜரின் ஊன்றிய காலுக்குக் கீழே பிரபஞ்சம் தோன்றும்போது ஏற்பட்ட வெற்றிடம்தான் சிதம்பரம் , இந்தச் சிதம்பரத்தின் மையப் புள்ளியின் மீது நின்று தான் நடராஜர் இடைவிடாமல்நாட்டியமாடிக் கொண்டு, ஐந்தொழில்களையும் செய்து வருகின்றார்.. அவரோட ஆட்டம் நின்றால் அனைத்தும் முடிந்து விடும்.(இது புராணங்களில் உள்ள செய்தி)

எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்பது,

மனிதனுடைய சுவாசம் இட கலையிலிருந்து , பிங்கலைக்கும், பிங்கலையிலிருந்து, இடை கலைக்கும் இயல்பாக மாறி ஓடும்போது ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் சுழுமுனை நாடி வேலை செய்கிறது. சுழுமுனை நாடி வேலை செய்யும் அந்த இடைவெளிதான் சிதம்பர ரஹசியம். குறிப்பிட்ட இந்தச் சொற்ப நேரத்தில் எண்ணங்கள் இல்லாமல் மனம் இயல்பாகவே(இடைவெளியை) சூன்ய நிலையை அடைகிறது. இந்த வெற்றிடத்தைத் தரிசிப்பவர்களுக்கு, அந்த நிலையிலேயே இருக்க முடிந்தவர்களுக்கு ஜென்ம விமோச்சனம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு நடக்கக் கூடிய 21,600 சுவாசத்தில் 3000 சுவாசங்கள் இந்த சுழுமுனையில் நடக்கிறது. இதனையே 3000 தீட்சிதர்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது.








நடராஜரின் தத்துவம் இதைத்தான் கூறுகிறது.

ஒரு கால் தூக்கி , மறுகால் ஊன்றி ஆடுவது என்பது சுவாச ரகசியம். கால் என்றால் மூச்சு எனப்பொருள். சிவனின் ஊன்றிய காலுக்குள் இருக்கும் "முயலகன்" எனும் அரக்கனே மனம். கால் மாற்றி ஆடத் தெரிந்தால் முயலகனைக் கட்டுப் படுத்த முடியும். சுவாசக் கலை தெரிந்தால் மனத்தைக் கட்டுப் படுத்த முடியும்.அகக் கண்ணால் உணர வேண்டிய ரகசியத்தை புறக்கண்ணால் பார்க்க முயற்சிக்கிறோம்.

ஆருத்ரா தரிசனத்தன்று நமது உடலிலுள்ள ஆகாயத் தத்துவத்தை எளிதாக உணரமுடியும்.






நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஓடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நாடிகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .




"சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம்பலம் தேடி விட்டோமே"-........பட்டினத்தார்



"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்"




                                                                      ஓம் தத் சத்

1 comment:

gayathri said...

சிதம்பர ரகசியம் நமக்குள் இருக்கும் ரகசியமே என்று உணர்த்திய தங்களுக்கு மிக்க நன்றி .நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் தங்களை போன்ற ஆசான் கிடைத்ததற்கு.

Post a Comment